ஒழுவிலொடுக்கம்

194. கருவி கழல வரைநோக்காஞ் சிந்தை

கருவி கழல வரைநோக்காஞ் சிந்தை
பெருமூச்சாம் போதம் பிறியி – லருளாய்
வெதும்பி யுடல் வெறுக்கு மின்பாய் விகள
முதிர்ந்துறையு நாணுமொடுங் கும்.

(இ-ள்.) கருவி கழலவரை நோக்கு ஆம் சிந்தை பெருமூச்சு ஆம் போதம் பிறியில் – கருவிகள் நீங்கவே மலை மேல் நின்று நோக்குவோர்க்கு நிலத்தின்கண் உள்ள பொருள்கள் அருகித் தோன்றுமாப்போலப் பிரபஞ்சம் எல்லாம் பொய்யாய்த் தோன்றுவதாம், அக்கருவிகளுள் அதோமுகமாய் நின்ற போதம் அவற்றைப் பிறியில் ஊர்த்த முகமாய் நின்று தன்னை அறியும், அங்ஙனந் தன்னை அறிந்தபோது இங்ஙனம் இருக்கின்ற யான் எறும்புகளால் நாங்கூழ் அரிப்புண்டது போல், அளவில் காலம் அக்கருவிகளால் அரிப்புண்டேனே என்னும், சிந்தனையால் நெட்டுயிர்ப்புளவாம்;

அருள் ஆய் உடல் வெதும்பி வெறுக்கும் இன்பு ஆய் விகளம் முதிர்ந்து உறையும் நாணும் ஒடுங்கும் – தன்னை அறிந்தபின்னர் அருள் தரிசனம் உண்டாய், பின்னர் அவ்வருளே தனக்கு வடிவாகி, இம்மாயா உடலம் வெதும்பி இதனை வெறுப்பன், பின்னர் ஆநந்தமுண்டாய், இவ்வாநந்த மேலீடாகிய உன்மத்தந் தலைமீக்கொண்டு மௌனமா யிருப்பான், அஃதன்றி, பிரபஞ்சத்தார்க்கு நாணுவதாய நாணமும் நீங்கும்.

(வி-ரை.) ”போதம்பிறியில்” என்றதனால் தன்னை அறிந்தென்பது வருவிக்கப்பட்டது. “அருளாய்” என்றதனால், அருள் தரிசனம் வருவிக்கப்பட்டது. நாணம் ஒடுங்கலாவது நீராடல் பூசனையாதி செய்திலன் என்று உலகத்தார் பழிப்பது குறித்து வரும் நாணம் எனக்கொள்க.

இத்திருவெண்பாவால் கருவிகள் நீங்கியவிடத்து வருங்குணமும், தன்னை அறிந்தவிடத்து வருங்குணமும், திருவருள் தோன்றியவிடத்து வருங்குணமும், ஆநந்தந் தோன்றியவிடத்து வருங்குணமுங் கூறியவாறு காண்க.