பெருநோவுக் கேயென்னப் பெற்ற துடற்போக
நரகேழு மூட்டுமிது நாஞ்செத்- துருவத்துத்
தாமல்லாற் போகிப்ப தல்லவது வன்பர்பதங்
காவலாட் கைத்தளை போற் காண்.
(இ-ள்.) பெரு நோவுக்கே என்னப் பெற்றது உடல் போகம் நரகேழும் ஊட்டும் இது நாம் செத்து உருவத்துத் தாம் அல்லால் போகிப்பது அல்ல- உடலாகிய பெருநோவுக் கென்னக் கருதிப்போகத்தை அநுபவிப்பது தானே பிறவியாகிய நரகமேழினும் கொடு சென்று அவற்றில் உண்டாகிய துன்பங்களை புசிப்பிக்கும், இஃது எங்கனம் எனின், இவர் அநுபவிக்கும் இப்பிராரத்தம் தற்போதம் மாண்டு இத்தேகத்துத் தாம் இருப்பது அல்லாமல் ,அருள் வடிவாயிருந்து அநுபவிப்பதல்ல ஆகலின்
அது அன்பர் பதம் காவல் ஆள்கைத்தளை போல் காண் – திருவடியைப் பிரியாது நின்ற அம் மெய்யன்பர் தம் பிராரத்தம் தற்போதம் மாண்டு தேகம் தாம் அல்லாது திருவருள் தாமாயிருந்து அநுபவிப்பது ஆகலின், அப்பிராரத்தம் தேகமிருக்குமளவும் காவலாள் போலும் கைத்தளை போலும் இருந்து தேகம் நீங்கும்போது அதனோடுதானும் நீங்கும் ஆகலின், அவர்க்கு மறுபிறவி உளவாகா என்று அறிதி.
(வி-ரை.) தேகம் தானாயும் போகம் தனதாயும் கருதிக்கொண்டு தற்போதத்தால் அப்போகத்தைப்பற்றி அநுபவித்தலின் இதாகிதங்களும், இவ்விதாகிதங்களால் இருவினைகளும், இவ்விருவினைகளால் மறுபிறவியும், இங்ஙனம் தொன்று தொட்டு வரும் ஆகலின், “நரகேழுமூட்டும்”என்றார்.
போதம் இறந்திருத்தலானும், பூரணவடிவாயிருத்தலானும், வினைசார்தற்கு இடமின்மையால், அவர்க்கு மறு பிறவி இன்றென்பது காண்க.
உடம்பு மூப்புப் பிணிக்கு இடம் ஆகலின், அதனை “பெருநோவு” என்றார். “நாஞ் செத்துருவத்துத் தாமல்லாற் போகிப்பதல்ல” என்று அவர்க்கு உண்மையாய குணங்களை இவர்க்கு இன்மை என்று எடுத்துக் கூறினமையால், அவர்க்கு அவை வருவிக்கப்பட்டது.
“இது” என்பது இவர் பிராரத்தமேல் நின்றது. “அது” என்பது அவர் பிராரத்தமேல் நின்றது.
பதம் – திருவடி ; பதத்தினை உடைய அன்பரெனப்பொருள் கொள்க.
போகமாய் வந்து சூழ்ந்து கோடலானும், பரமுத்தனாக வொட்டாது தேகத்தில் அவரைத் தடுத்து நிற்றலானும், பிரார்த்தத்தைக் காவலாள்’ என்றும் “கைத்தளை” என்றும் கூறினார்.
இத்திருவெண்பாவால் ஞானிகள் தேகபோகங்களில் பற்றிலர் ஆகலின், அவர் பிராரத்தம் அத்தேகத்தோடு கழியும் என்றும், அஞ்ஞானிகள் பற்றுளர் ஆகலின், அவர் பிராரத்தம் இதாகிதங்கள் வருவித்துப் பிறப்புக் கேது வாகும் என்றும் அறிவித்தவாறு காண்க.
ஒருவர் செய்த வினை மற்றொருவரைச் சாராமையான், அவர் செய்தவினை அவரைச் சாரா திருப்பது எங்ஙனம் எனின், மேற்கூறுகின்றார்.