ஒழுவிலொடுக்கம்

221. சுகிக்கில்லைத் துக்கஞ் சுடுகாடு சொர்க்க

சுகிக்கில்லைத் துக்கஞ் சுடுகாடு சொர்க்க
மகத்துக்குஞ் சொர்க்கநர காய்ந்தார் – சுகிப்பதுவு
மத்துவி தாநந்தர்க் காகார மற்றது
பத்தி செய்வார்க் கேற்கும் பயன்.

(இ-ள்.) சுகிக்குத் இல்லை துக்கம் சுடுகாடு சொர்க்கம் அகத்துக்கும் சொர்க்கம் நரகு ஆய்ந்தார் சுகிப்பதுவும் அத்துவித ஆநந்தர்க்கு ஆகாரம் அற்றது – பரமசுகமே வடிவாயிருப்போர்க்குத் துக்கம் என்பதில்லை, துக்கம் இன்மையால் சுகமும் இன்று, இது சுத்தமாகிய இடம் என்னும் கருத்துச்சிறிது எழினும் அதுவே நரகமாய்த் தோற்றலின், அசுத்தமாயுள்ள சுடுகாடே அவர்க்குச் சுவர்க்கம், அஃதன்றித் தாம் ஆநந்தவடிவாயிருத்தலே சுவர்க்கம் எனவும், தேகம் தாம் என்று சிறிது எழும் கருத்தே நரகம் எனவும், புறத்திற்குச் சொர்க்க நரக ஆய்ந்தாற்போல், அகத்திற்கும் சொர்க்க நரகாய்ந்தார். அஃதன்றி அவர்  அநுபவிப்பதும் அத்துவிதாநந்தமேயாம், இங்ஙனம் இருந்த அத்துவிதாநந்தர்க்கு அவ்வாகாமிய வினை புசிப்பற்று நின்றது; இங்ஙனம் அவர்க்குப் புசிப்பற்று நின்றால் அவ்வினை தான் எவ்விடத்துச் செல்லும் எனின்.

பத்தி செய்வார்க்குப் பயன் ஏற்கும் -அவர்மேல் அன்பாய் இதஞ்செய்வோர்க்கும் வெறுப்பாய் அகிதஞ் செய்வோர்க்கும் அவ்விருவினைப் பயன்களுஞ் சாரும், என்று அறிதி

(வி-ரை.) ஆநந்தமே வடிவாயிருத்தலின் தநுவில்லை, அவ்வடிவில் தற்போத மின்மையால் கரணமில்லை, சுடுகாடே சுவர்க்கமாய்க் காண்டலால் புவனமில்லை, அவ்வாநந்தத்தையே அநுபவித்தலால் போகமில்லை, இங்ஙனந் தநுகரண புவன போகங்களை எல்லாம் கடந்து நின்றோரை அவ்வினை சாரமாட்டாமையின் “ஆகாரமற்றது” என்றார்.

தேகத்தை உடையவனைத் “தேகி” என்றாற் போலச் சுகவடிவா யிருந்தோரைச் ‘சுகி’ என்றார்.

இத்திருவெண்பாவால் ஞானிகள் சிவாநந்தாநுபவர் ஆகலின், அவரை வினைகள் சாரா என்றும், அவர்க்கு இதாகிதங்களைச் செய்வோரிடத்தே அவை சாருமென்றும் அறி வித்தவாறு காண்க.

இங்ஙனம் இருந்த ஞானி அடைந்த பேரின்பத்திற்கு உவமையாது எனின், மேற்கூறுகின்றார்.