ஒழுவிலொடுக்கம்

222. அரிபிரம ரிந்திரர்க ளாதிகளார் தானச்

அரிபிரம ரிந்திரர்க ளாதிகளார் தானச்
சரிவிரத்த னின்பத்தைச் சாற்றிற் – பரமசிவன்
றானே சரிமீட்டுச் சாற்றுகிற்றான் றான் சரிவே
றானாரை வேதமறி யா.

(இ-ள்.) அரி பிரமர் இந்திரர்கள் ஆதிகளார் தானச்  சரிவிரத்த னின்பத்தைச் சாற்றிற் – அரி பிரமர் இந்திரர் முதலிய தேவர்களது இன்பமெல்லாம் ஒன்றாகக் கூட்டின் சரி, அவ் விரத்தன் இன்பத்திற்குவமை சொல்லுமிடத்து

பரமசிவன் தானே சரி மீட்டுச் சாற்றுகின்றான் தான் சரி வேறு ஆனாரை வேதம் அறியா -அஃதன்றி பரமசிவனது பரிபூரணாநந்தந்தானே சரி, பின்னுஞ் சொல்லுமிடத்துத் தன் இன்பத்திற்குத் தன் இன்பமே சரி, இங்ஙனம் எப்பொருள் கட்கும் வேறாய் நின்றடைந்தார் இன்பத்தை வேதங்களும் இவ்வளவென்று அளவிட்டறிய மாட்டாது .

(வி-ரை.) பரமசிவனது பரிபூரணாந்த மெல்லாம் தாமாகி நின்று அநுபவித்தலின், ‘பரமசிவன் தானே சரி! என்றும், தன் இன்பம்போல் மற்றியாவர்க்கும் இன்மையால், “தான் தான் சரி” என்றும், அவ்வின்பமும் தாமாகாது, அதனை அநுபவிப்போரா யிருத்தலின், “வேறானாரை” என்றுங் கூறினார்.

இன்பத்திற் குவமை கூறினமையான் அவர் சரி என்றதை அவரதின்பஞ் சரியென்று கூறப்பட்டது, அஃது ஆகுபெயர். தான் – அசை.

இத்திருவெண்பாவால் ஞானிகளது இன்பப்பெருமை கூறியவாறு காண்க.