சாலோக மாதி தருஞ்சைவ சித்தாந்தி
பாலேகம் பார்க்கப் பணியுமவன் – மேலே
யுருகித் திருவுளத்துக் குற்றபணி செய்வார்
பெருமைக்கே துண்டோ பிற.
(இ-ள்.) சாலோகம் ஆதி தரும் சைவ சித்தாந்தி பால் ஏகம் பார்க்கப் பணியும் அவன் மேலே –தன்னை வந்து அடைந்தோரது பக்தி பணிவிடைக் கேற்ப அவர்க்குச் சாலோக சாமீப சாரூபமாகிய பதமுத்திகளையுங் கொடுக்கும் சித்தாந்த ஞானி பால் ஏகமாயிருந்த மெய்ப்பொருளை அறியும் பொருட்டு வந்து மனமொழி மெய்களான் வணங்கும் அதிபக்குவன்மேல்;
உருகித் திருவுளத்துக்கு உற்ற பணி செய்வார் பெருமைக்கு ஏது உண்டோ பிற –பேரன்பு வைத்து உள்ளுருகி அவனது திருவுளத்திற்கு ஏற்ற பணிவிடைகளைச் செய்வோரது பெருமைக்கு மேலாய பெருமை பிறிது யாதுண்டு?
(வி-ரை.) வந்தடைந்தோர் பக்குவா பக்குவங்களை அறிந்து, சரிதாதிகளை வருவித்து, சாலோகமாதி பதமுத்திகளைக் கொடுப்பதும், அதிதீவிர பக்குவனாய் வந்தோனுக்குத் தற்போதத்தைக் கெடுத்து நிரதிசயவின்பத்தைக் கொடுப்பது, மற்றைச் சமயங்களில் இன்மையால், “சாலோகமாதி தருஞ் சைவசித்தாந்தி பாலேகம்பார்க்கப் பணியுமவன்” என்றார்.
இங்ஙனம் இருந்த சித்தாந்தியைப் பணியுமவனைப் பணிவோர்க்கும் அம்முத்தியின்பம் உண்டா மாகலின் ,” உற் றபணி செய்வோர் பெருமைக்கே துண்டோபிற’ என்றார்.
இத்திருவெண்பாவால் சித்தாந்த ஞானம் போலே வேறு ஞானம் இன்றென்பதும், இந்த ஞானம் பெற்றோரை வழிபடுவோர் பெருமையே பெருமையென்றும் அறிவித்தவாறு காண்க.