சகலமுங் கேவலமுந் தாக்கறுப்பான் றானோ
பகல்விளக்கோ டுச்சிப் படிகந் – தகவைத்தூ
ழூட்டி யுறக்குவது நாமேநம் முட்கலப்பு
நாட்டமொழி யென்றருளி னான்.
(இ-ள்.) சகலமும் கேவலமும் தாக்கு அறுப்பான் தானோ பகல் விளக்கோடு உச்சிப் படிகம் தகவைத்து ஊழ் ஊட்டி உறக்குவதும் நாமே – நமதருளை முன்னிட்டுக் கொண்டு சகல கேவலங்களைத் தன்னுள் தாக்காது அறுப்பதே அன்றி, தானோ சகலத்தையும் கேவலத்தையும் தன்னுள் தாக்காது அறுப்பான்? ஆதித்தன் சந்நிதியில் தற்சேட்டை அற்றிருந்த விளக்குப் போலும், உச்சிக்காலத்துப் பஞ்சவன்னங்களையுங் கவராதிருந்த படிகம்போலும், எமது சந்நிதியில் உனது தற்போதஞ் சீவியாதிருக்கவும் எமது சந்நிதியை நீ அங்ஙனம் நீங்காதிருத்தலின், கருவிகள் உன்னைத் தாக்காதிருக்கவுந் தகைமை பெறவைத்து, உனது ஊழ்வினைப்படி உனக்கு ஊட்டி உறக்குவிப்பது நமதருளே; இங்ஙனம் வீட்டின்பங் கொடுப்பது நமதருளே என்றறிந்து, இவ்விருவகை இடத்தும் உன்போதஞ் சிறிதேனுஞ் சீவியாது நிற்பின் நம்மிருவர்க்குந் தாமே இரண்டற்ற ஐக்கியங்கூடும் இஃதன்றி,
நம்முள் கலப்பு நாட்டம் ஒழி என்று அருளினான்– யாம் உன்னை வந்து கூடுதலும் நீ நம்மை வந்தடைதலும் ஆகிய கருத்து உன் பால் ஏழின் ஐக்கியங்கூடாது ஆகலின், நாமிருவரும் வந்து நம்முட் கலப்பதாகிய நாட்டத்தை நீ ஒழிதி என்று திருஞான சம்பந்தப்பிள்ளையாராகிய சுவாமிகள், எனக்கு அருளிச்செய்தார். இவ்வாறே நீயும் அறிதி எனின், அவரது திருவடிக்கண் ஐக்கியம் உனக்கும் கிடைக்கும்.
(வி-ரை.) எதிரிட்டுத் தடித்த போதம், எதிரிடாது அசைவற நின்று தேய்ந்தபோது ஆன்மாவிற்குஞ் சிவத்திற்கும் ஐக்கியம் தாமே கூடும் ஆகலின், “நம்முட்கலப்பு நாட்டமொழி யென் றருளினான்” என்றார். தமதாசாரியர் தமக்கருளிச்செய்த முறைமை ஈதென்று மாணாக்கனுக்கு அறிவித்தவாறு காண்க.
இத் திருவெண்பாவால் சகல கேவலங்களை அருட் போதத்தாலன்றி ஆன்மபோதத்தால் நீக்கப்படாதென்று அறிவித்தவாறு காண்க.
இங்கனங் கருதிநின்று திருவருளைக் கூடுதல் அரிதாயினும் இன்னும் ஒருபாயம் கூறுகின்றார்.