அருளும் பரையு மருக்கன்மதி போன்ற
விரவுபக லற்ற விடத்தே – பரமநிலை
சத்திக் கழற்றியிலே சச்சிதா நந்தமய
சுத்தநிலை நீயற்றது.
(இ-ள்.) அருக்கன் மதிபோன்ற அருளும் பரையும் பகல் இரவு அற்ற இடத்தே பரமநிலை – அருக்கனும் மதியும்போன்ற அருளும் பரையும் ஆகிய பகலும் இரவும் அற்றவிடத்தே பரமாநந்தாநுபவநிலை ஆம்
சத்திக் கழற்றியிலே சச்சிதாநந்தமய சுத்தநிலை நீ அற்றது -அப்பரமாநந்தாநுபவமாகிய அநுபவசத்தி நீக்கத்தில் சச்சிதாநந்த வடிவாயிருந்த சிவமாகிய சுத்தநிலை, இச் சுத்தநிலையே உன் தற்போதஞ் சிறிதுந் தோன்றாது அற்றநிலை என்றறிதி.
(வி-ரை.) அருள் ஆன்மாவிற்குப் புலப்படத் தோற்றலானும், அப்பரையினுந் தடிப்பாகலானும் அவ்வருளை “அருக்க”னென்றும், அவ்வருளைக் கடந்தது பரையாகலானும், இப்பரை ஆன்மாவிற்குத் தோற்றாமல் தோற்றலானும் இப்பரையை “மதி”யென்றும், பகலிரவு கண்ணிற்குத் தோற்றுதல் போல் அருளும் பரையும் ஆன்மாவிற்கு அநுபவமாய்த் தோற்றலான், “பகலிர” வென்றுங் கூறினார்.
பிரகாசம்,உஷ்ணம்,சோபை என்னும் இம்மூன்று குணத்தையும் உடைய சூரியனைப்போல், அருள், பரை, ஆநந்தம் என்னும் இம்மூன்று இக்கலணத்தையும் உடையது சிவம் ஆகலின் ”சச்சிதாநந்தமய சுத்தநிலை” என்றார்
ஆநந்தம் அளவும் ஆன்மாவால் அநுபவங் கூறப்படும்; அவ்வாநந்தா தீதத்தில் அநுபவங் கூறப்படாது; ஆகலின், “சுத்தநிலை நீயற்றது” என்றார்.
இனிப்பஞ்ச மலங்களும் அறுநெறி எங்ஙனம் எனின், மேற்கூறுகின்றார்.