ஒழுவிலொடுக்கம்

தெளிசொற் பொருள் விளக்கம்

*பிரளயாகலர் – மும்மலங்களுள் ஒருமல நீத்தோர், அவர் பிரமன் முதலானோர் என்னும் தெளிசொற் பொருள் விளக்கம்.

‘குதர்க்காரணிய நாச மஹாபரசு.

பிரளயாகலர் இருமலமுடைய உருத்திரர்கள் என்றும், சகலராவார் மும்மலமுடையராகிய பிரம விட்டுணு முதற் கிருமி ஈறாகவுள்ள உயிர்கள் என்றும் ஒரு சாரார் கூறலும், அதை ஆராயும் முகத்தான் மேற் கண்ட தெளிசொற் பொருளின் நுண்கருத்தை வள்ளற்பெருமானாரின் முதன் மாணாக்கராகிய தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியார் அவர்கள் விளக்கிக் காட்டிய வாசகம் வருமாறு:-

பிரளயாகலர் இருமலமுடையார் ஆவார் எனில், இருமலம் உடைமையும் பிரளயாகலர் அவற்றை உடையராவாருமாயின், இருமலத்தையும் புசித்தற்கு உடைமையாகத் தேடியபின் உடையராவாரெனக் கூறியவாறாயிற்று. எனவே இருமலத்தைத் தேடுவாரெவரோ அவர் தாம் பிரளயாகலர் எனப்பட்டவர் என்று ஆம். என்னை? ஆவாரென ஆக்கவினை எதிர்காலம் பற்றி நிற்றலானும், உடையார் என்பது முக்காலத்திற்கும் பொதுவாகிய குறிப்புவினை முற்று ஆதலானும், அது வினையாலணையும் பெயராகி அப்பெயர் மற்றொரு பெயரோடு ஒட்டுமாறு விளக்கும் பண்பு வாசகமாய் இறந்தகாலப் பெயரெச்சம் அடுத்து நிற்றலானும் என்க. அங்ஙனமாகலின், எம்மலத்தையும் ஒழிக்க முயல்வதே சிறப்பு எனவும், அங்ஙனம் ஒழித்தாரே புவனேசராகிய உருத்திரராதியர் எனவும், வேதாகமங்கள் கூறி முறையிடவும், அதனை நோக்காது ஒழிக்கத் தக்க இருமலத்தையும் புசித்தற்கு உடைமையாகத் தேடுவார் உருத்திரர் என்று பொருள்படப் பிரளயாகலராவார் இருமலமுடையராகிய உருத்திரர்களென்று கூறுவது மாறுகொளக்கூறல் முதலிய குற்றங்களுக்கு இடனாய் ஆற்றல் முதலிய கெட்டு நின்றது. இனி அவ்வாசகத்தை நினைப்பினும் பெரும் பாதங்களுள்ளும் பெரும்பாதம் விளையும் என்க.

இங்ஙனமாகலி னன்றே மலம் துன்பஞ் செய்வன் என்றும், அவை

ஒழித்தற்பாலனவும் பிறவும் என்றும் யாவர்க்கும் பொருள் கிடைக்கப் பிள்ளையவர்கள் அம்மல மூன்றனுள் ஒன்று ஒழித்தார் என்றனர். ஆகவே, இனி இரண்டொழிப்பார் என்பது கூறாதமையும், ஆகலின் பிள்ளையவர்கள் கூறியதாகிய மும்மலங்களுள் ஒரு மல நீத்தோர் பிரளயாகலர் அவர் பிரமன் முதலானோர் என்றதுவே *சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க்கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசையுடைமை யாழமுடைத்தாதல் முறையின் வைப்பே உலகமலையாமை விழுமியது பயத்தல் விலங்கு தாரணத்த தாகுதல் என்றும் பத்தழகினுக்கும் உதாரணமாய் நின்றதோர் வாசகமென்க

*நன்னூல், பொதுப்பாயிரம், 13

ஆயின், பிள்ளையவர்கள் பிரமன் முதலாயினோரைப் பிரளயாகலர் எனக் கூறினார். அக்கருத்து என்னை யெனில்: பிரளயாகலர் மூவகையாருள் ஒருவர் மல கன்ம பரிபாகராய் அவ்வண்ணமே இறை திருவருளான் முத்தி அடைவர் எனவும்; (மற்றொரு வகையார் (?) அபக்குவ மலகன்ம சகிதராய் புரியட்டகம் பெற்றனராயினும், அவ்வருட் சிறந்தார் மந்திரேசுரராய் புவனாதிபதித்துவம் அடைந்து, சுகனேசாதி அஷ்ட மண்டலிகளாய்க் கலாதத் துவத்தினும் குரோதேசாதி எண்மரமாயக் குணதத்துவ மஸ்தகத்திலும் வீரேச ஸ்ரீ கண்டேசராய்க் குணதத்துவத்தின் கீழும் பிரமாண்டத்தின் மேலும்

சதருத்திரராய்ப் பிரமாண்டாதாரர்களுமாய் வசிப்பர் இவர் அதிகாரபோகார்த்தம் தூலமடைந்து சகலர் போல்வர் எனவும்; மற்றொரு வகையார் புரியட்டக முடையராய்க் கன்மானுகுணயோனிகளை அடைவர் எனவும்; முற்கூறிய சதருத்திரர் பிரமன் முதலானோர் எனவும் கபாலீசன் முதலானோர் எனவும் மூலாகம் பேதங்கள்

கூறுதலின், அவ்விரிவகையாமாறு விளங்கப் பிள்ளையவர்கள் சுருங்கக் கூறுதல் என்னும் அழகாதி பெறக் கூறியவாறென்க.

இக்கருத்தின் போஜதேவர் அருளிச்செய்த தத்துவப் பிரகாசிகை, அகோரசிவாசாரியர் அருளிச் செய்த அதன் உரை, காமிகபேதமான மிருகேந்திரம், சித்தாந்த சேகரம், திருமந்திரமாலை முதலியவற்றுள்ளும் காண்க. இனி விஞ்ஞானகலர் சகலர் இலக்கணமும் பிறவும் இடம் பெற்றுழி விரிப்பாம்.

இனிச் சித்தாந்த சேகரத்தில்  அஷ்டாதச சதவுருத்திரர் திருநாமங் கூறுமிடத்து.

கபாலீசோஹ்யஜோ புத்தோ வஜ்ரதேஹப்ரமர்தந:
விபூதிரவ்யயச்சாஸ்தா.

என்று தொடங்கி,

அதபூபூதகலாக்கி ருத்ரோஹாடகஏவச
கூர்மாண்டஜச்ச ஸத்யச்ச ப்ரஹ்ம விஷ்ணுச்ச ருத்ரக

என்று முடித்தவற்றுள் பிரமன் விஷ்ணு என்பவர்கள் உருத்திர பேதமேயாய்

அடங்குவர் என்பதும் பிரளயாகலரே என்பதும் காண்க.

ஆயின் பிள்ளையவர்களுக்குப் பிரளயாகலர் என்பர் உருத்திரரே என்பது கருத்தாய் அவர் பெயர் விளங்கக் கூறுவது வேண்டினராயின், கபாலீசன் முதலானோர் எனக்கூறாது பிரமன் முதலானோர் என மயங்கக் கூறுவானேன் எனில்; அற்றன்று: பிருதிவி தத்துவத்திலுள்ள புவனபேத நூற்றெட்டினுள் அண்டத்துட் புறத்துள்ள புவனம் ஆறனுக்குந் தலைவராவாருள் பாதலத்தில் காலாக்கினி உருத்திரர் கூர்மாண்டர் ஆடக ஈசுரரும் ஆகிய மூவர் போக, பூமிக்குமேல் ஆகாயத்திலுள்ள மூன்று புவனத் தலைவராகிய பிரமா விஷ்ணு ருத்திரருள் முதலாதல் நோக்கி பிரமன் முதலானோர் எனக் கூறினார் என்க. இங்ஙனம் மூலாகம வுபாகம் பத்ததி முதலியவற்றுள்ளும் உருத்திரர் பேதங்களைக் கூறுமிடத்து ஒவ்வோர் காரணம்பற்றிப் பிரசித்திப் பொருளை அந்தமாகவும் ஆதியாகவும் கூறுதல் வழக்காதல் நோக்கி பிரமன் முதலானோர் எனக் கூறியுள்ளனவுங் காண்க. இவற்றை விரிப்பாற் பெருகும்.

இங்ஙனம் பிரளயாகலர் புரியட்டக சரீரிகளாய் அவருள் ஒருசாரர் கன்மானுகுண யோனிகள் உறுவரென ஆகமங் கூறி இறேல், புரியட்டம் மாயா காரிய தத்துவக் கூட்டத் தானியன்ற தனுவாதலாலும், சகலர் போலத் தூல தேகமும் பெறுதலாலும், அவரை மாயா பாசம் தொலைத்தவரென எங்ஙனம் கூறுவது? இனி, இக் கருத்தை உணராது, பிரமன் விட்டுணுமுதல் கிருமி ஈறாகவுள்ள உயிர்கள் மும்மல முடையார் என்று கூறினாரே எனின், (அது) ஆகமவிதிகளைப் பெற்று அநுபவத்தாற் றெறிந்து கூறியவாறு அன்று. ஆதலின் அது பிள்ளையவர்கள் உரையை மறுத்தல் ஆற்றாதென்க.

இனி, மறுத்தல் ஆற்றாதென்ற அம்முறையைச் சொல் வகையானும் பொருள் வகையானும் விரிக்கின்றோம். என்னை? (அவர்) சகலர் மும்மலமுடையராகிய பிரமன் விட்டுணு முதல் கிருமியீறாகவுள்ள உயிர்கள் எனக் கூறியதால், மற்றைய விஞ்ஞான கலர் பிரளயாகலர் உயிர்த் தொகையில் உள்ளாரன்று, முத்தர் என்றவாறாயிற்று. அங்ஙனம் முத்தராகவே அவர்க்கு ஒரு மலமும் உள்ளது என்பது பொருந்தாது. இங்ஙனம் முத்தராகவே அவர்க்கு ஒரு மலமும் உள்ளது என்பது பொருந்தாது. இங்ஙனம் உயிர் முத்தர் என்பதன் பொருளும் ஓர்ந்துணர்க. ஆகவே, அது மூவகை யாருயிர்வர்க்கம் என்றதனோடு முரணுகின்றது.

அல்லதூஉம், ஒரு சாதிவகைப் பல பண்புப் பெயர்ப் பொருளவற்றின் ஆதியந்தம் கூற வந்த விடத்து, ஆதிக்கு அச்சாதி இருமைப் பண்புப் பெயர்ப் பொருளையும் அந்தத்திற்கு அச்சாதிப் பண்புப் பெயரின் ஒரு பொருளையும் கூறலமையாது.

அங்ஙனமன்று; பல பண்பு என்றமையான், தொழில் வேற்றுமையால் சிறப்பியற்பண்பு பொதுவியற்பண்பு இழிவியற் பண்பு எனப் பொது வகையினும் பண்பு மூவகைப் படுமாதலின், அம் மூவகையும் குறித்தற்கு ஆதியந்தங் குறித்து வேறு பிரித்துப் பொதுவியற்பண்பி சிறப்பியற்பண்பியைச் சேர்த்து முதலென அடக்கி இழிவியற் பண்பின் பாலதன்று. ஆகலான் நுகர்ச்சி ஒற்றுமையுடைய சாதியை விரிக்க வந்தவிடத்துப் பண்பு வகைப்பாடு பற்றிக் கூறவேண்டுவதின்று. விளங்குதற் கெனின், சிறப்பியற் பண்பினையும் இழிவியற் பண்பினையும் முதலுங் கடையுமாகக் குறித்தாற் போதும். அதுவே மரபுமாம். ஆகவே விட்டுணு முதல் கிருமி ஈறாக வெனின் பொதுவியற் பண்பியாகிய பிரமனைக் கூற வேண்டா. இடையிற்றானே போதரும். அங்ஙனமன்றிப் பண்பையுடைய பெயரைப் பிரித்துரைத்து முதலென ஓர் எண்ணுப் பண்பியாக அடக்குதல் பண்புப் பொதுமை கூறுமுகத்து வழு; எண்ணுப் பண்பின் ஓரியற் பொதுபண்பி சேர்வதல்லது ஓரியல் வேற்றுப் பண்பிகள் தம்முட்சேராவாமாகலின், அற்றேல், பிரம விட்டுணுக்கள் ஓரியற் பொதுப்பண்பி யாகாரோ வெனில், ஆகார்; நாமரூபக் கிரியை முழுவதும் வேற்றுமைப்படுதலான் என்க.

அற்றேல், பிள்ளையவர்கள் பிரமன் முதலானோர் எனக் கூறுதலின், அவன்மேற் சிறந்த விட்டுணுவும் உயிரெனக் கூறி மறுத்தற்குப் போலும் அங்ஙனம் கூறியதெனில், ஆண்டும் விட்டுணு முதல் கிருமி ஈறாகிய எனக்கூறினமையும்; பிரமன் விட்டுணுமுதல் என்பதும் வழுவேயாம் என்க. ஆகலின் சொல் வகையாலும் சொற்புணர்த்த வகையாலும், ஒரு சார் பொருள் வகையாலும், அவ்வாசகம் வழுவேயாம் என்க. இதனை இன்னும் விரிக்கிற் பெருகும்.

இனி, பொருள் முழு வகையினால் ஆராயினும் பொருந்தாது. என்னை? அவ்வொழிவிலொடுக்கத்து (பொதுவிலுபதேசம் முதல் வெண்பா) வேதாகமப் பவுரி வீசும் என்ற குருத்தோத்திர முதல் திருவெண்பா கருணைபொழிவான் எடுத்தகை (சிதம்பர சுவாமிகள் உரை ) என்றவிடத்து, பிள்ளையார் உபதேசமுறை முதலியவைகளைத் தெரிதற்கு எடுத்துக்காட்ட, ஆண்டு எழுந்தருளி இருந்த தோடுடைய செவியன் என்னும் திருக்கடைக் காப்பின் திருவுளக்கிடையை விரித்து பிரளயாகலர்க்கு அநுக்கிரகித்தலும் இது என்றதனாலும்; அங்ஙனம் மெய்ப் பொருள் வந்த கோலம் குருவடிவு என்பது

*தோடு கூற்றுப் பித்தா மூன்றும்
பீடுடைத் தேசிகன் பேரரு ளாகும்

அகஸ்தியர் தேவாரத் திரட்டு, திருப்பதிகக் கருத்துரை.

என்றதனால் பெறப்படுதலானும்;

ஆண்டு எழுந்தருளிய குரு வடிவத்தைப் பிரமன் விண்டு முதலாயினோர் ஆண்டும் கைலை முதலிய பிறாண்டும் தரிசித்தாக அப்புராணமும் பிற புராணமும் கூறுதலினாலும்; அவர் நீங்கிய கீடாதியாயுள்ள மற்றைச் சகலர்கள் அங்ஙனம் எளிதில் தரிசித்தமை கூறப் பெறாமையானும்; பிரம விஷ்ணுக்கள் சகலர் என்பதற்கு நியாயமென்னை?

இங்ஙனம் சொல்வகை யறியாதாரோ நூல்வகை யறிவார்! அல்லதூஉம், அங்ஙனம் சகலர் மும்மலமுடையராகிய பிரமன் விட்டுணுமுதல் கிருமி ஈறாகவுள்ள உயிர்கள் என்று ஒழிந்தாரேல், ஔவையார்,

*மாலய னங்கி இரவி மதியுமையோ டேலுஞ் சிவசத்தி யாறு.
*ஔவை குறள், வீட்டு நெறிப்பால்,7.

எனவும், ஆளுடையவரசுகள்,

** ……காண்டகு சோதியார்க்கு
பிரிவிலா வமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை யையனை யாறனார்க்கே

*எரியலால் உருவமில்லை என்னும் திருஐயாற்றுத் திருநேரிசை

எனவும் வரும் பூர்வாசாரியார்கள் திருவாணைக் கென்ன விடை கொடுக்கக் (கூடும்) பூர்வாசாரியர்கள் (இங்ஙனம் அப்பிரம விஷ்ணுகளுக்குச் சிவசத்தியெனத் தெய்வத் தன்மை தரிப்ப (துகாண்க.)

அல்லதூஉம், கிரியார்ச்சனையிற் சத்தகுரு பூசையிலும் பிராசாத்திகம் ஆதாராதிதெய்வம் நிவர்த்தியாகி அதிதெய்வம் பூதாதிதெய்வம் புவனாதிதெய்வம் கிருத்தியாதி தெய்வம் நவவடிவம் கூறியவற்றுள்ளும் பிறவாற்றானும் பிரம விஷ்ணுக்களைச் சிறப்பித்துத் தியானிக்கவும் பூசிக்கவுமாகக் கட்டளையிட்டபின், அவர்களைக் கிருமிக்கு ஒத்த கிழுயிர் என்று கூறுவது அமோ? அல்லதூஉம், சேரமான் பெருமாள் பொன் வண்ணத் தந்தாதியுள்,

*9-வது பாட்டு

*இடமால் வலந்தா னிடப்பால் துழாய்வலப் பாலொண் கொண்றை
வடமா லிடந்துகி றோல்வல மாழி யிடம்வலமான்
இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழினலஞ்சேர்
குடமா லிடம்வலங் கொக்கரை யாமெங்கள் கூத்தனுக்கே

எனவும், ஆளுடையவரசுகள்,

*வடிவுகொண்டார்ந்த திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்.

*முடிகொண்டார் என்னும் தனித் திருத்தாண்டகம்.

எனவும் கூறியதற்கேற்ப, வைஷ்ணவத்துள்ளும் மூன்றாவது திருவந்தாதியுள்ளும் பேயாழ்வார் அருளிச்செய்த

தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ்
சூழரவும் பொன்னாணுந் தோன்றுமால் – சூழந்
திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்
கிரண்டுருவு மொன்றா யிசைந்து.

என்று ஒத்து கூறியிருத்தலாலும், விஷ்ணுவைக் கீடத்தோடொப்பக் கூறு(வது பொருந்துமோ)?

ஆயின், அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவொன்

என்று திருவாசகம் (திருவண்டப் பகுதி) கூறியருளிற்றாலோ எனின், ஆன்மாகட்கு மலந் தொலைப்பிக்கு முபாயமும் சிவத்தியல் விளக்கு முகமாகவும் கூறியதன்றி வேறன்று. இக்கருத்தை விரிப்பிற் பெருக்குமாதலின் குருமுகத்தாலுணர்க.