ஒழுவிலொடுக்கம்

28. விடாதவத்தை மூடி விடம் புசித்தாற் போலச்

விடாதவத்தை மூடி விடம் புசித்தாற் போலச்
செடாதிகளுஞ் சேதனனுஞ் சேர்ந்து -படாதுபடு
மச்சைக் கழற்றி னருள்வழிநீ யவ்வழியு
னிச்சைப் பொருண்மலமென் றெண்.

(இ-ள்.) விடாது அவத்தை மூடி விடம் புசித்தால் போலச் செடாதிகளும் சேதனனும் சேர்ந்து படாதுபடும்- அணுவளவேனும் இடைவிடாது அவத்தைகள் மூட அவ்வ வத்தைகள் தோறும் வேறுவேறாய் இருந்துள்ள உடம்பு முதலிய கருவிகளும் ஆன்மாவும் கலந்து, விடமருந்தினாற் போல் படாத துன்பங்கள் எல்லாம்படும்; (ஆகலின் அங்கனம் என்றறிந்து),

அச்சைக் கழற்றின் அருள் வழி நீ அவ்வழி உன் இச்சைப் பொருள் மலம் என்று எண்- அந்த அவத்தைகளாகிய உடம்புகளை நீங்குதி எனின், நீ அருளிடம் ஆவை, அவ் வவத்தைகளிடம் உன்னால் இச்சிக்கப்பட்ட பொய்ப்பொருள்கள், அஃதன்றி உன்னை வாதிக்கும் மலமும் அவை யென்று அறிதி.

(வி-ரை.) சாக்கிராவத்தையில் இருக்கும் போது அதனுள் தோன்றும் கருவிகள் யாதொன்று யாதொன்று அடுத்தது அதனதன் மயமாயும், அதனதன் கணின்று சொப்ப னாதிகளில் செல்லும்போது ஆண்டாண்டுத் தோன்றும், கருவிகள் மயமாயும், மீண்டு வரும்போதும் அந்த அவத்தைகள் தோறும் முற்கூறிய கருவிகளைச் சார்ந்து வரலானும், அந்த அவத்தைகளை விட ஆன்மாவிற்கு வேறிடம் இன்மையானும், “விடாதவத்தை மூடி” என்றார். விடம் அருந்தினோனை அவ்விடம் வாதிப்பது போல் அவத்தை தன்னைச்சேர்ந்த ஆன்மாவை வாதித்தலான் அங்ஙனங் கூறினார்.

உடம்பும் விடயமும் ஆகிய இச்சைப் பொருளால் மற்றை அவத்தைகள் மேன்மேல்தொடர்தலின் எல்லாவற்றையுங்கூட்டி “அவ்வழியுன்னிச்சைப்பொருள்” என்றார். யாதோரவத்தை அடுத்தது அந்த அவத்தை வடிவாய் ஆன்மா இருத்தலின், அதனை “அச்சு” என்றார்.

இத்திருவெண்பாவால் ஆன்மா சார்போதன் என்பதும் இச் சார்போதத்தால் துன்பமே அன்றி இன்பம் இன்று என்பதும் அறிவித்தவாறு காண்க.