தன்னையறி வார்க்கெதிருந் தானும் பயனுமிலை
யென்னிற் சிவனையறி வென்போமோ – சின்னாத
தீதகற்று மாற்றொளிபோற் றேய்ந்து சிவமாயிருக்கப்
போதகத்தை நாமொழிவிப் போம்.
(இ-ள்.) தன்னை அறிவார்க்கு எதிரும் தானும் பயனும் இலை என்னின் சிவனை அறி என்போமோ- கருவிகள் முப்பத்தாறையும் நீங்கித் தன்னை உள்ளபடி உணர்ந்தோர்க்கு முன் அறிவிற்கு எதிரீடாய்த் தோன்றின கருவிகளும் இல்லை, தேகமாகியதானும் இல்லை, இத்தேகத்தால் அநுபவிக்கும் விடயப்பயனும் இல்லை, என்று வேதாகமங்கள் கூறும் எனின், அவ்வான்மாவில் அக்கினிக்கு உட்டணம்போல் பிரிபடாதிருந்த சிவத்தை எதிரிட்டு அறியத் தொடங்கின் என்ன விபரீதமாய்ப் போமோ? (யாம் அறிகிலோம்)
சின்னாத தீது அகற்றும் மாற்று ஒளிபோல் தேய்ந்து சிவம் ஆய் இருக்கப் போதகத்தை நாம் ஒழிவிப்போம்- ஞான நாதனே, புடம்போட்டுக் கருமசம் அகற்றும் பொன்னுக்கு மாற்றொளி மிகுதல் போல், உன் போதங்குறைந்து நீ சிவப்பிரகாசந் தானாயிருக்க நானா உபாயங்களானும் அப்போதத்தை யாம் ஒழிவிப்போம், (யாம் ஒழிவித்தபடியே நீ ஒழிந்து போதி).
(வி-ரை.) பொன்னும் கல்லும் சரியொத்தபோது இருபுறனும் சாயாது மேல்முள் நேரேநிற்குங் கீழ்முள்போல, தன்னை உள்ளபடி உணர்ந்தோனுக்குக் கேவல சகலங்களிற் சென்று அதன் அதன் மயமாய் இருந்த அறிவு அவைகளைச்சாராது பிரிந்து அருள் நாட்டத்தில் அசைவற நிற்றலால், “தன்னையறிவார்க் கெதிருமில்லை” என்றும், தேகம் தானாயிருந்த அறிவு அதனைப்பிரிந்து அறிவாய்நிற்றலால், “தானுமிலை” என்றும், அருட்பூரணம் என்றைக்கு விளங்குமோ என்று அவ்வருள் மேல் இச்சையைவைத்து விடய இச்சையை நீங்கி நிற்றலால், பயனுமில்லை” என்றுங் கூறினார்.
புடம் போடுந்தோறும் இடை குறைந்து மாற்று உயர்தல்போல, தற்போதத்தால் சிவத்தை எதிரிட்டு அறியாது அறிந்து அசைவற நிற்குந்தோறும் அப்போதங் குறைந்து சிவப்பிரகாசம் மேலிடலால், “தீதகற்றுமாற்றொளிபோல்” என்று உவமை கூறினார்.
இத்திருவெண்பாவால் சிவத்தை எதிரிட்டு அறியக் கூடாதென்று அறிவித்தவாறு காண்க.