ஒழுவிலொடுக்கம்

30. பூரணவா நந்தமாந் தானோ புறம்புபால்

பூரணவா நந்தமாந் தானோ புறம்புபால்
வாரியின்மீன் போன்ற மலவாழ்வைப் – பாரீ
ருதியாது நின்ற வொளியையிரு ளாக்கு
மது காணு மக்கினித்தம் பம்.

(இ-ள்.) பூரண ஆநந்தம் ஆம் தானோ புறம்பு பால் வாரியில் மீன் போன்ற மல வாழ்வைப்பாரீர் – உள் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்று கூறப்பட்ட எவ்விடத்தும் நிறைந்துள்ள பரிபூரண சுகமாகிய சிவந்தானோ அதனை விட்டு நீங்காத ஆன்மாவிற்குப் புறம்பு? பாற்கடலிற் சஞ்சரித்தும் அப்பாலைப்புசிக்க அறியாது ஜெந்துக்களைப்புசிக்கும் மீன் போலும், அப்பூரணாநந்தத்திருந்தும் அதனை அநுபவிக்க அறியாது மாயா மலமாகிய விஷயங்களை அநுபவிக்கும் இந்த ஆன்மாக்களினது மலவாழ்க்கையைக் கண்டீர் கொலோ! (அஃதன்றி),

உதியாது நின்ற ஒளியை இருள் ஆக்கும் அது அக்கினித்தம்பம் – உதய அத்தமனம் இன்றி எக்காலத்தும் ஓர் இயல்பாய் நின்ற ஞானசூரியனைத் தெரியவொட்டாது இருள் போற்காட்டும் அது அக்கினித்தம்ப மந்திரம்போலும் ஆன்மாவை அநாதியே மறைத்திருந்த ஆணவமானது.

(வி-ரை.) கூகைக்கு விழிக்கண் இருந்த குற்றத்தால் சூரியப் பிரகாசம் இருளாய்த் தோற்றியது போல், ஆணவமலக்குற்றத்தால் ஆன்மாவிற்கு ஞானவொளி இருளாய்த் தோன்றினமையால், ”ஒளியை யிருளாக்கும்” என்றும், அக்கினியோடு மந்திரம் அபின்னமாயிருந்து அவ்வக்கினி முழுது மறையாது அதனது சூட்டை மறைத்தது போல், ஆன்மாவோடு ஆணவம் அபின்னமாயிருந்து அவ்வான்மா முழுதுமறையாது அதனது ஞானத்தை மறைத்தலான் , ”அதுகாணுமக்கினித் தம்பம்” என்றுங்கூறினார்.

காணும் – அசை.

இத்திருவெண்பாவால் மலத்தடையால் ஆன்மாவிற்கு ஆநந்தமும் திருவருளும் தோற்றாதிருந்தன என்று அறிவித்தவாறு காண்க.