ஒழுவிலொடுக்கம்

11. சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து

சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து
வைத்து வழி காட்டு மறைப்புலவன் – சுத்தன்
றமிழ்க்குரிசிற் சீகாழிச் சம்பந்த னென்பா
னெமக்கருளிச் செய்த திது.

(இ-ள்.) சத்திய நிர்வாணத்தால் தற்போதத் தாக்கு அறுத்து வைத்து வழிகாட்டும் சத்திய நிர்வாணத்தீக்கையால் எனது போதத்தை ஒன்றோடும் பற்றாது ஒழித்துச்சிவத்தோடு இரண்டறக்கலக்கவைத்து என்பால் வந்தடைந்தோர்க்கும் எனதுள்ளே தாமே நிறைந்திருந்து முத்தி நெறியை அறிவிக்கும்.

மறைப்புலவன் சுத்தன் தமிழ்க்குரிசில் சீகாழிச் சம்பந்தன் என்பான் எமக்கு அருளிச்செய்தது இது வேதங்களை எல்லாம் ஓதாமல் உணர்ந்த ஞானப்புலவர், மும்மலங்களையுங் கடந்து நின்ற நின்மலர், தமிழினது இலக்கணமெல்லாம் அளவிட்டறிந்த தமிழ்வேந்தர், சீகாழியென்னுந்திருப்பதியில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப்பிள்ளையாரென்று யாவரும் புகழாநின்ற சுவாமிகள், எம்போல்வார் வீடடைந்து உய்யும் நிமித்தம் அருளிச்செய்தது இந்நூலின் அருத்தம்.

(வி-ரை) இந்நூல் பிறர்க்கு உபகாரமாகக் கூறினமையால், “வழிகாட்டும்’’ என்பது பிறர்க்கெனக்கொள்க. “மறைப்புலவன்’’ “தமிழ்க்குரிசில்” என்றமையால், உபய கலைகளையும் உடையாரென்றறிக. இத் திருவெண்பாவால் நூன் மரபு கூறியவாறு காண்க.