ஒழுவிலொடுக்கம்

12. தாக்கற்ற பூரணத்திற் சந்தற்ற தம்மைமலம்

தாக்கற்ற பூரணத்திற் சந்தற்ற தம்மைமலம்
நீக்குந் துயரகல நேசித்தோர் – பார்க்கும்
வழிபலநாம் பைமறித்த வாறு நீ மாளா
வொழிவிலொடுக்க முரைப்போம்.

(இ-ள்.) தாக்கு அற்ற பூரணத்தில் சந்து அற்ற தம்மை மலம் நீக்கும் துயர் அகல நேசித்தோர் – எல்லாவற்றோடும் கூடி நின்றும் அவைகள் ஒன்றோடும் தாக்கற்றிருந்த பரிபூரண சிவத்தோடு ஆணவம் நீங்கியவிடத்து இரண்டறக் கலந்து விளங்காநின்ற தம்மை அந்த ஐக்கியத்தைத் தெரியவொட்டாது மறைத்து இரண்டுபடுக்கும் அவ்வாணவமலத் துன்பம் அகன்று ஏக அன்பு கொண்டோர்;

பார்க்கும் வழி பல நாம் பை மறித்த ஆறு நீ மாளா ஒழிவில் ஒடுக்கம் உரைப்போம் – ஆராய்ந்தறியும் சாத்திர நெறிகள் பற்பல உளவாம், அவைபோலும் மறைத்துக்கூறாது நாம் பையைவிரித்து அதனுள் இருந்த பொருள் ஈதென்று காட்டுமாறு, மாணாக்கனே! நீ ஒழியாமல் ஒழியுமிடத்து ஒடுங்கும் நெறியைக் கூறுவாம்.

(வி-ரை.) ஆன்மாவிற்குச் சிவத்தோடு ஐக்கியம், மலமறைப்பால் தெரியாதிருத்தலின், “நீக்குந் துயரகல நேசித்தோர்” என்றார். “பார்க்கும் வழிபல ” என்றது பேதம் அபேதம் பேதா பேதங்களாய்க்கூறு நெறிகளை.

அநுபவ ரகசியமெல்லா மறையாமல் கூறினமையால், “பைமறித்தவாறு” என்றார்.

ஆன்மா கெடாது அதனது போதங் கெடுதலின், ”மாளா வொழிவில்” என்றார்.

அவ்விடஞ் சுகாதீதம்; அதனுள் ஒடுங்கும் நெறி இதனுள் கூறினமையால்; ”ஒழிவி லொடுக்கமுரைப்போம்’ என்றார்.

இத்திருவெண்பாவால் நூற்பயன் கூறியவாறு காண்க.