ஒழுவிலொடுக்கம்

115. குரங்கை நினையா திருமென்று கூறத்

குரங்கை நினையா திருமென்று கூறத்
திரும்பியதுவே தியானம் – வருங்கதை போல்
நீ சிவமாய் நில்லென்றா னீங்கியது வாய் நினைந்து
மாய்வையது வன்றோ மலம்.

(இ-ள்.) குரங்கை நினையாது இரும் என்று கூறத்திரும்பி அதுவே தியானம் வரும் கதைபோல்- ஓர் புருடன் ஓர் பேதைக்குக் குரங்கினை நினையாதிருத்தி யென்று கூற அவன் அங்ஙனங் கூறிய மாத்திரத்தில் மீண்டு அக்குரங்குத் தியானமே அவனுக்கு மனத்தில் குடியாயிருந்தது என்று உலகத்தில் வழங்கும் கதைபோல்,

நீ சிவம் ஆய் நில் என்றால் நீங்கி அது ஆய் நினைந்து மாய்வை அது அன்றோ மலம் – நீ ஒன்றையும் எதிரிடாது சிவமயமாய் நில்லென்று கூறினால், அங்ஙனம் எதிரிடும் போதம் ஒழிவதே அச்சிவமயமாய் நிற்பது என்று அறியாது, போதத்தால் சிவத்தை எதிரிட்டுப் பார்த்து யான் சிவமயமாயினேன் ஆயினேன் என்று கருதி வருந்துவாய்; இங்ஙனம் கருதி வருந்தப்பண்ணுவது அன்றோ மலமாவது

(வி-ரை.) கூரிய புத்தி உடையோனுக்கு நீ குரங்கை நினையாதிரு என்று கூறினால், அக்கணமே அந்நினைவை ஒழித்திருப்பன்; அதுபோல், தீவிரதர பக்குவனுக்கு நீ சிவமாய் நில்லென்றால் அக்கணமே சிவம் என்றுந்தான் என்றும் கருதும் துவிதபோதம் ஒழிந்து சிவமாய் நிற்பன் என்று அதற்கு எதிர்மறையும் வருவித்துக் காண்க.