ஒழுவிலொடுக்கம்

116. மணிப்பாம் பிருளின் மறைந்திருக்கத் தேடுங்

மணிப்பாம் பிருளின் மறைந்திருக்கத் தேடுங்
கணக்காந்தற் போதத்தைக் காட்டி-யுணர்த்துகினு
நீரிற் கிணறு நிழலுயுத்த மும்போலா
மாரித்தை நீக்கியிருப் பார்.

(இ-ள்.) மணிப்பாம்பு இருளில் மறைந்து இருக்கத் தேடும் கணக்கு ஆம் தற்போதத்தைக் காட்டி உணர்த்துகினும் – சென்னியின் மீது மணியையுடைய பாம்பு தான் இருளிடத்து மறைந்திருப்ப இருளைத்தேடும் முறைமை போலாகும், நீ உன் போதத்தை முன்னிட்டு அருளிடத்து மறைந்திருப்ப அருளைத்தேடு முறைமை, என்று போதஞ் சீவிப்பதைக் காட்டி, அருளையும் உன்னை விட்டு நீங்காத பரிபூரணம் என்று அறிவிப்பினும் தெளிந்து கொள்ளாது.

நீரில் கிணறும் நிழல் உயுத்தமும் போல் ஆம் ஆர் இத்தை நீக்கி இருப்பார் – பிரளயமாய்க் கோத்து நின்ற சுத்த சலத்தில் கிணறு தொட்டு நீர் தேடும் ஒருவனைப்போலும், தனது நிழலை எதிராய்க் கருதி அதனோடு யுத்தஞ்செய்யும் ஒருவனைப்போலும், பின்னரும் உன் போதஞ் சீவியாநிற்கும்; ஆகலின், இப்போதத்தை நீக்கிச் சிவமாயிருப்பார் யாவர்?

(வி-ரை.) சென்னியின் மீது மணிச்சுடரை உடைய பாம்பு இருளைத்தேடுந் தோறும் அவ்விருள் நீங்குவதன்றி நில்லாது; அதுபோல, தற்போதத்தை முன்னிட்டு அருளைத் தேடுந்தோறும் இவ்வருள் நீங்குவதன்றி நில்லாது என்பதும், அப்பாம்பு சென்னிமணியைப் புரைவழிக் கொணர்ந்து வாய்க்குள் அடக்கின் இருள் தேட வேண்டுவது இன்று, அதுபோல், முன்னிட்ட போதத்தைப் பின்னிட்டால் அருள் தேடவேண்டுவது இன்று என்பதும், அவ்விருள் நிறைந்தாற்போல் இவ்வருள் நிறைந்திருப்பது என்பதும், நீர் வெள்ளமாயிருக்கவும் அந்நீரில் கிணறு தொட்டு நீர் சம்பாதிக்கத்தொடங்கினவனைப்போல், அருள் எங்கும் பிரிவற்ற பூரணமாயிருக்கவும், அவ்வருள் தேடி அருளைச் சம்பாதிக்கத் தொடங்கினோன் என்பதும், தன்தேக அசைவால் நிழல் அசைவது என்று அறியாது அதற்கு ஓர் அசைவு வேறுளது என்று கருதி அதனோடு யுத்தஞ்செய்வானைப்போல், தன் போத அசைவால் கருவிகள் அசைவது என்று அறியாது அவற்றிற்கு ஓர் அசைவுவேறுளது என்று கருதி அவற்றை அடக்கத் தொடங்கினோன் என்பதும், இவ்வுவமைக் குறிப்புகளாற் காண்க.

இங்ஙனம் எழும் போதம் ஒழிப்பார் யாவர் ஆகலின், “ஆரித்தை நீக்கியிருப்பார்” என்றார்.

“மணிப்பாம்பிரு” ளென்பது தற்போதத்தை முன்னிட்டு அருளை நாடுதற்கு உவமை, “நீரிற்கிணறு” என்பது அருளை ஏகதேசமாக நாடுதற்கு உவமை, ”நிழலுயுத்தம்” என்பது தன்னை அருளுக்கு ஊணாகக்கொடுத்து நிற்கவே கருவிகள் ஒழியும் என்று அறியாது, தற்போதத்தால் அவற்றை அடக்கத் தொடங்குவதற்கு உவமை எனக்கொள்க.

“பழக்கங்கொடியது பார்” என்னும் திருவெண்பா முதல் இவை நான்கு திருவெண்பாவானும் அளவில் காலம் தற்போதத்தால் அத்துவித நாட்டத்தில் பழகி வருதலின் அப்போத மொழித்துச் சிவத்தோடு இரண்டற்று இருத்தற்கு உபாயம் யாது கூறினும், பழக்க மிகுதியால் ஆன்மாக்கள் அத்-துவித நாட்டம் ஒழித்து நிற்றல் மிகவும் அரிதென்று அறிவித்தவாறு காண்க.

ஆயின் இப்பழக்கம் நீக்குமாறு எங்ஙனம் எனின் மேற்கூறுகின்றார்.