உட்புறம்பாம் பூசனையு மியோக சமாதிகளுஞ்
சுட்டறிவு கெட்டவர்போற் றூங்குவதும் – விட்டுப்
பகல்விளக்கு முச்சிப் படிகமும் போற் பாச
மகலநிற்பார்க் கார்சரியொப் பார்.
(இ-ள்.) உள் புறம்பு ஆம் பூசனையும் யோக சமாதிகளும் சுட்டு அறிவு கெட்டவர்போல் தூங்குவதும் விட்டு – அந்தரியாகம் பகிரியாகமாய்ச் செய்யும் பூசைகளும், ஆறாதார பாவனாயோக சமாதி கூடுதலும், இது அது என்று சுட்டி அறியும் தற்போதங் கெட்டுப் பரமாநந்த நித்திரை பண்ணும் மெய்ஞ்ஞானிகளைப்போல் மனத்தால் பிராண வாயுவை உள் மறித்துப் பிரமரந்திரத்தில் அதனுள் மறைந்து தூங்குவதும், ஆகிய இவற்றை எல்லாம் பொய்யென்று விட்டு நீங்கி
பகல் விளக்கும் உச்சிப் படிகமும்போல் பாசம் அகல நிற்பார்க்கு ஆர் சரி ஒப்பார் – பகற்காலத்து ஏற்றிய தீபம் போலும் உச்சிக்காலத்துப் படிகம்போலும், கருவிகள் முப்பத்தாறும் அகன்றுபோகத் திருவருளில் அசைவற நிற்போர்க்கு இணை ஒப்பார் யாவர்?
(வி-ரை.) இருளில் தோன்றியது போலன்றிச் சூரியப் பிரகாசத்தால் முதல் கெடாது ஒளிகெட்ட பகல் விளக்குப்போல், முன்னர் ஆணவ அந்தகாரத்தில் தோன்றியது போலன்றி அருட்பிரகாசத்தால் முதல் கெடாது போதங்கெட்டு நிற்றலின், “பகல் விளக்குப்போல்” என்றும் பொழுதேறுங் காலத்தும் சாயங்காலத்துமன்றி உச்சிக்காலத்தில் பஞ்ச வன்னங்களையும் கவராத படிகம்போல், சகல கேவலத்தன்றிச் சுத்தமாகிய அருள் நேரே கருவிகள் ஒன்றோடும் தாக்கற்று நிற்றலின், “உச்சிப்படிகம்போல்” என்றும், “பாசமகல நிற்பார்” என்றுங் கூறினார்.
பகல்விளக்கென்றது தற்போதம் சீவியாது அருளில் நிற்றற்கு உவமையும், உச்சிப்படிகமென்றது கருவிகள் ஒன்றோடும் தாக்கற்று நிற்றற்கு உவமையுமாகக் கொள்க.
இத் திருவென்பாவால் நீ இந்நாட் பழகிய யோகப் பழக்கத்தைவிட்டு ஞானயோகத்தில் பழகுதி எனின் சிவத்தைப் பெறலாம் என்று அறிவித்தவாறு காண்க. ஆயின் ஒன்றையும் கருதாது சும்மாநிற்பின் சிவத்தை அடைவது எங்ஙனம் எனின், மேற் கூறுகின்றார்.