ஒழுவிலொடுக்கம்

120. அறிவுக் கறிவா யகண்டமாய் நின்ற

அறிவுக் கறிவா யகண்டமாய் நின்ற
நிறைவைக் குறைய நினைந்து – மறவையுமாய்த்
தாமே சிவத்தைப் படைத்தழிப்பார் தற்றோடம்
போமா றிலைபிறப்பேன் போம்.

(இ-ள்.) அறிவுக்கு அறிவு ஆய் அகண்டம் ஆய் நின்ற நிறைவைக் குறைய நினைந்து மறவையும் ஆய்- உயிர்க்கு உயிராய் நின்று அறிவிக்கும் அறிவாய், கண்டிதமெல்லாங் கடந்ததாய், திரிவு இன்றி ஓரியல்பிற்றாய் எக்காலமும் விளங்காநின்ற பரிபூரண சிவத்தை ஏகதேச வடிவாய்த் தற்போதத்தால் தியானித்து, அங்ஙனம் தியானித்த வடிவை மறந்து போமந் தன்மையுடையருமாகி,

தாமே சிவத்தைப் படைத்து அழிப்பார் தன் தோடம் போம் ஆறு இலை பிறப்பு என்போம்- தம்மைப் படைத்தழிக்கும் சிவத்தைத் தாமே படைத்தழிப்பார் ஆகலின், இவர் இங்ஙனஞ் செய்தலான் வரும் தமது பாவமே நீங்கு மாறு இல்லை எனின், பிறப்பு என்னை நீங்கும்?

(வி-ரை.) தியானித்தபோது வடிவு தோன்றியும், விடுத்தபோது அவ்வடிவு நீங்கியும் வருதலின், “படைத்தழிப்பார்” என்றும், சிவத்தைப் படைத்தழிப்பது தோஷ மாகலின், “தோடம்” என்றுங் கூறினார்.

இத்திருவெண்பாவால் யோகியினது கருத்தை எடுத்துக்காட்டி, இங்ஙனம் ஞானபக்குவன் செய்வது பாவம் என்று அறிவித்தவாறு காண்க.