மறப்பு நினைப்பு மயக்கும் விகற்பம்
வெறுப்பும் விருப்பும் விடாம – லிறப்பேனைப்
பானுவும் வேதியும் போற் பார்த்தும் பரிசித்தும்
ஞான பந்தன் தானாக்கினான்.
(இ-ள்.) மறப்பும் நினைப்பும் மயக்கும் விகற்பும் வெறுப்பும் விருப்பும் விடாமலி றப்பேனை- மறப்பும் நினைப்புமாயுள்ள கேவலமும் சகலமும் மாறிமாறி வரலால், தேகாதி பிரபஞ்சங்கள் மேல் விருப்பும் வெறுப்பும் சனனங்கள் தோறும் விட்டு நீங்காமல் துன்பத்தை அனுபவிக்கையினும் அதனை ஆணவத்தான் இன்பமெனக் கருதி இறுமாந்து கொண்டிருப்பேனை
பானுவும் வேதியும் போல் பார்த்தும் பரிசித்தும் ஞானபந்தன் தான் ஆக்கினான் – பூதவிருளை நீக்கும் பானுவையும் தன்னைச் சேர்ந்த செம்பைப் பொன்னாக்கும் பரிசன வேதியையும் போன்று, தமது ஞானப்பிரகாச நோக்கத்தால் பார்த்தும், கரசரணங்களால் பரிசித்தும், மும்மலங்களையும் நீக்கித் திருவருளால் எடுத்துத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் தமது திருவடியில் ஒன்றாக்கினார்.
(வி-ரை.) தான் அல்லாத தேகத்தை யானென்றும் தனது அல்லாத போகத்தை எனதென்றும் கருதப்பண்ணுவது மயக்கம்; அத்தேக போகங்களில் வெறுப்பும் விருப்பும் வரச்செய்வது விகற்பம், ஆகலின், இவற்றைத்தொடர்ந்து நின்று இருவினைகளும், இவ்விருவினைகளால் பிறப்பிறப்பும் விடாது வரலால், “மயக்கும் விகற்பும் வெறுப்பும் விருப்பும் விடாமல்” என்று இம்முறை வைத்துக் கூறினார்.
ஞான தீக்கை பண்ணும்போது கிருபாநோக்கம் வைத்துத் திருவடிசூட்ட வேண்டுமாகலின், “பார்த்தும் பரிசித்தும்” என்றார். அங்ஙனம் பண்ணுந் தீக்கையில் பாவனையும் இருத்தலின், அது கூறாராயினார். அப்பாவனையால் தம்மோடு ஐக்கம் பண்ணிக் கோடலின், “தானாக்கினான்” என்றார்.
இத்திருவெண்பாவால் தமதாசாரியர் தீக்கையினால் தம்மைத் திருவடிக்கண் ஐக்கியமாகிய முறைமை அறிவித்து, நீயும் ஞான தீக்கை பண்ணிக்கொள்ளுதி என்று அறி வித்தவாறு காண்க.
மூன்றாமதிகாரம் யோகக்கழற்றி .
முற்றிற்று.