ஆகாயம் போவார்க்கு மாவிகையோ வாழ்கடலோ
மீகாமன் போற்றிரிய வேண்டுமோ-யோகிக்குங்
கன்மமோ பூரணன் காண் காலமுமா காயமும்போ
யென்ன தொழிலையியற்றும்.
(இ-ள்.) ஆகாயம் போவார்க்கு மாவிகையோ ஆழ்கடலோ மீகாமன் போல் திரிய வேண்டுமோ –ஆகாய கமனம் பண்ணுவோர்க்கு ஓர் பற்றுக்கோடோ? அவ்வாகாயம் ஆழ்கடலோ? இவ்வாழ்கடலிற் செல்லும் மீகாமனைப்போல் பற்றுக்கோடுபற்றி ஓர் துறைசார்தற்பொருட்டுத்திசைநாடி இங்ஙனம் சுழல அவர்க்கு வேண்டுமோ? (அதுபோல),
யோகிக்கும் கன்மமோ பூரணன் காலமும் ஆகாயமும் போய் என்ன தொழிலை இயற்றும்- சிவயோகி ஆநந்தபூரணன் ஆகலின், தேகாந்தனா யிருந்துள்ள கிரியையாளனைப் போல் அவனுக்கும் கிரியை செய்ய வேண்டுமோ? அஃதன்றி, காலமும் ஆகாயமும் தாம் இருந்தபடி இருப்ப, தம்மிடத்தில் பிறபொருள்கள் தொழிற்படுவன அன்றி, தாம், சென்று யாது தொழிலைச் செய்யும்?
அதுபோல், பூரணனாகிய அச்சிவயோகி சந்நிதானத்தில் கருவிகள் தொழிற்படுவன அன்றி, தான் ஒரு கருவிகளோடும் கூடித் தொழில் செய்யான்.
(வி-ரை.) ஆகாய கமனம் பண்ணுவோன் தான் நினைத்த தானத்தில் வாயுவினாற் சென்றிருத்தல்போல, சிவயோகி தான் கருதிய வீட்டை அருளால் அடைந்திருத்தலின், ” ஆகாயம் போவார்க்கு மாவிகையோ” என்றும், ஆழ்கடலிற் செல்லும் மீகாமனுக்குக் கப்பலாகிய பற்றுக் கோடுபற்றி ஓர் துறைக்கண் சார்தற்பொருட்டுத் திசைநாடிச்செல்லவேண்டும். அதுபோல, கிரியாவானுக்கு ஓர்வடிவைச் சிவமாய்ப் பாவித்து ஓர் பதவியை அடைதற்பொருட்டு அதற்கு விதிமார்க்கமாய் அருச்சனையாதிகளைச் செய்ய வேண்டும். அவர்க்குச் செய்யவேண்டுவது இன்றாகலின், ‘மீகாமன் போற்றிரிய வேண்டுமோ’ என்றும் கூறினார்.
சிவயோகிதான் அறிவாயும், ஆநந்தம் சிவமாயும் கண்டு, அறிவாகிய தான் ஆநந்தமாகிய சிவத்தில் கலந்திருப்பன். கிரியாவான் தான் தேகமாயும் சிவம் சிலையாதிகளாற் செய்யும் ஓர்வடிவாயும் கண்டு, அதனைத் திரிகரணங்களால் வழிபட்டு இனிமேல் ஓர் பதவியை அடையக்கருதி இருப்பன். ஆகலின் இவர் இருவருக்கும் இங்ஙனம் உவமை கூறினார்.