நெருப்பில் விறகுதியா நெய்யிற்பா றோன்றா
வருக்க னிருளை யடர்த்தாற்போன் – மருட்கெடுத்த
ஞானத்தின் பேர்கிரியை நாசமெனின் ஞானிகளு
மூனத் தொழிலுரைப்பா ரோ.
(இ-ள்.) நெருப்பில் விறகு உதியா நெய்யில் பால் தோன்றா அருக்கன் இருளை அடர்த்தாற்போல் மருள் கெடுத்த ஞானத்தின் பேர் கிரியை நாசம் எனின்- நெருப்பின்கண் விறகு தோன்றாதது போலும், நெய்யில் பால் தோன்றாதது போலும், ஆதித்தன் பூதவிருளை அழித்து எழுந்தாற்போல் மும்மலமாகிய இருளை அழித்து எழுந்த ஞானம் அவற்றினது காரியமாகிய கிரியையையும் தோன்றாது அழிக்கும் ஆகலின், இந்த ஞானத்தின் பேர் கிரியா நாசம் என்று வேதாகமங்கள் கூறும் எனின்,
ஞானிகளும் ஊனத்தொழில் உழைப்பாரோ – இந்த ஞானத்தைப் பெற்று இதுவே வடிவாயிருந்துள்ள மெய்ஞ் ஞானிகளும் குற்றம் பொருந்திய கிரியைத்தொழிலைச் செய்வாரோ? செய்யார்.
(வி-ரை.) விறகை அழித்து எழுந்த நெருப்பில் விறகும், பாலை அழித்து எழுந்த நெய்யில் பாலும் தோன்றா; அதுபோல, கிரியையை அழித்து எழுந்த ஞானத்தில் கிரியை தோன்றாது; ஆகலின்; இங்ஙனம் உவமை கூறினார்.
கிரியை பிறவித் துன்பத்துக்கு ஏது ஆகலானும், அதனால் ஆன்மலாபமாகிய ஆநந்தம் இன்மையானும், “ஊனத்தொழில்” என்றும், “உழைப்பாரோ” என்றுங் கூறினார்.
இவையிரண்டு திருவெண்பாவானும் ஞானிக்குக் கிரியை செய்யவேண்டுவது இன்று என்று அறிவித்தவாறு காண்க.