போத வொழிவையுரை போய்த்தீண்டா பூதலத்தோர்
பாதமனங் கண்போலப் பற்றுமோ – நீதெளியின்
கண்ணாடி யிற்கடலைக் கைவசமாக் காட்டுதல்போற்
கண்ணாரி சன்னையைப் போற் காண்.
(இ-ள்.) போத ஒழிவை உரை போய்த் தீண்டா பூதலத்தோர் பாதம் மனம் கண்போலப் பற்றுமோ – ஆன்மபோத ஒழிவில் தானாய் இருந்துள்ள சிவத்தை வேதாகம சாத்திரங்களால் அளவிட்டறியக்கூடாது, அஃதன்றிக் காலால் நடந்து சென்றும் மனத்தால் நினைத்தும் கண்ணாற்பார்த்தும் இப்பூதலத்தோர் ஓரோர்பொருளை அறிந்து பிடிப்பது போல் கருவிகளாலும் அதனை அறிந்து பிடிக்கக்கூடாது (ஆதலின், அங்ஙனம் அறிந்து பற்றுவது அன்றி,)
நீ தெளியின் கண்ணாடியில் கடலைக்கை வசமாக்காட்டு தல்போல் கண் நாரி சன்னையைப் போல் காண்-நீ அச்சிவத்தை அறியுமிடத்துச் சிறிதாகிய கண்ணாடியில் பெரிதாகிய கடலை மகவுக்குப் பிரத்தியக்ஷமாகக் காட்டு மாறு போலும், ஓர் நாரி ஓர் புருடனுக்குக் கண் சைகையால் கலவிக்கு இடங்காட்டுமாறுபோலும் யாம் அதனை அறிவிக்குங் குறிப்பால் நீ அறிதி.
(வி-ரை.) போத ஒழிவை அப்போதத்தான் அறியும் கலைகளானும் கருவிகளானும் அறியக்கூடாதாகலின், ” உரை போய்த் தீண்டா” என்றும், ‘பாதமனங்கண்போலப் பற்று மோ” என்றுங் கூறினார்.
பரிபூரண சிவத்தின் இலக்கணமெல்லாம் நன்றாய் விளங்கும்படி வேதாகம முடிவிற் கூறிய சில உபதேச மொழிகளை யெடுத்து இந்நூலிற் கூறுதலின், “கண்ணாடியிற் கடலைக்கை வசமாக்காட்டுதல்போல்’ என்றும், பூரண நோக்கம், மௌன முத்திரை முதலிய குறிப்பான் அச்சிவத்தை அடைதற்கு உபாயம் அறிவித்தலால், “கண்ணாரி சன்னையைப்போல்’ என்றுங் கூறினார்.