ஆனைக்கை போலபின வத்துவிதா நந்தமாம்
மோனத்தை வாக்குமன முட்டுமோ -ஞானத்தாற்
காக்கை யிருந்தமனை கைமேற் பிறையென்ற
லாற்கருதி னீசிவமா வை.
(இ-ள்.) ஆனைக்கைபோல் அபின அத்விதாநந்தம் ஆம் மோனத்தை வாக்கு மனம் முட்டுமோ- பரிசம் அறியுங்கையும் கந்தம் அறியும் நாசியும் ஒன்றாயிருக்கின்ற யானை யினது துதிக்கை போன்று, பின்னம் இன்றிச் சிவமும் ஆன்மாவும் இரண்டற்றிருந்த அத்துவிதமாகிய மோனாநந்தத்தை வாக்காற் கூறுங் கலைகளும் மனோபாவனைகளும் தீண்டுமோ?
காக்கை இருந்த மனை கைமேல் பிறை என்றலால் ஞானத்தால் கருதின் நீ சிவம் ஆவை –ஓர் மனையையும் பிறையையும் ஒருவனுக்கு ஒருவன் அறிவிக்குங்கால், காக்கையிருந்த மனையென்றும் கைவிரல்மேற் பிறையென்றும் இங்ஙனம் அறிவித்தலான் அவன் அறிவது போலும், யாம் சிவத்தைக் குறிப்பான் அறிவிக்கும் உபதேசங்களை ஞானத்தால் கூர்ந்து விசாரித்து அறிதியெனின் நீயும் அச்சிவம் ஆவை.
(வி-ரை.) கை நாசி என்று இரண்டுறுப்பாய் இரண்டு விடயங்களையும் வேறுபிரித்து அறிவதாயிருந்தும் பிரிபடாது அதுவே இதுவாய் இதுவே அதுவாய் இருப்பது போல, சிவமென்றும் ஆன்மாவென்றும் இரண்டு பொருளாய் இரண்டு ஞானங்களும் வேறாயிருந்தும் ஐக்கியத்துப் பிரிபடாது அதுவே இதுவாய் இதுவே அதுவாய் இருத்தலின், “ஆனைக்கை போலபினவத்து விதம்” என்றார்.
மனைகள் பலவற்றையுங் கடந்து சென்று காக்கை இருந்தமனையை நீ யடைதி என்று ஒருவன் அறிவிக்க அறிதல்போல், கருவிகள் பலவற்றையுங் கடந்து சென்று நாததத்துவத்தின் முடிவில் நின்ற சைதன்னியம் நீ என்று அறிவிக்க அறிதலால், “காக்கையிருந்தமனை” என்றும், ஒருவனுக்கு ஒருவன் பிறையை அறிவிக்குங்கால் விரல்மேற் பிறை என்று சுட்டிக்காட்டி அறிவிக்க அவ்விரல் நேரே நோக்கி அப்பிறையைத் தரிசித்தல் போல், நாதாந்தத்தின் முடிவில் நின்று நீ திருவருளை முன்னிட்டுக்கொண்டு சிவத்தைத் தரிசிக்க வேண்டும் என்று அறிவிக்க அம்முறையே சென்று சிவத்தைத் தரிசித்தலால், “கைமேற்பிறை” என்றுங் கூறினார்.
கண்போலும் ஆன்மா, விரல்போலுந் திருவருள், பிறைபோலுஞ் சிவம் எனக் கொள்க.
இவ்விரண்டு திருவெண்பாவானும் மெய்ப்பொருளை அறிவித்தற்கு உபாயங் கூறியவாறு காண்க.