உதியா துளதாகி யோங்கிப்பேராம
லதிசூக்கு மங்குறைந்தா காமற் – பதையாத
வாகாய முங்காலும் போல வசைவற்ற
தேகாண் பரிபூரணம்.
(இ-ள்.) உதியாது உளது ஆகி ஓங்கிப் பேராமல் அதி சூக்குமம் குறைந்து ஆகாமல்- தான் ஒன்றினால் உற்பத்தியாகாது எக்காலமும் உள்ளதாய், கருவிகள் முப்பத்தாறையும் கடந்திருப்பதாய், போக்குவரவு அற்றதாய், நுண்ணிய பொருள்கட்கெல்லாம் நுண்ணிதாய், ஓர் காலத்திற் குறைந்து ஓர் காலத்தில் வளராததாய்,
பதையாத ஆகாயமும் காலும் போல அசைவு அற்றதே பரிபூரணம்- முடிவுகாலத்தில் சலனம் இன்றாய், வாயுவும் ஆகாயமும் பிரிவற்று ஒன்றாயிருப்பது போலச் சடசித்துக்களாயுள்ள பிரபஞ்சமும் தானும் பிரிபடாது ஒன்றாய் அசைவற்று இருப்பதே அச்சிவத்தினது பரிபூரண சொரூபம்.
(வி-ரை.) தநுவாதிகளை மாயையில் தோற்றுவிப்பதும், ஆன்மாக்களை அவற்றிற் கூட்டுவிப்பதும் அஃதாகலினும் அதற்குமேல் மற்றொன்று இன்மையானும், “உதியாதுளதாகி” என்றும், அசலம் ஆகவின், “பேராமல்” என்றும், யாவைக்கும் தாரகமாய் உட்புறம்பாய் இருந்தும் ஒன்றோடும் தாக்கற்றிருத்தலின், “அதிசூக்குமம்” என்றும், அகண்டாகாரமாய் இருத்தலின், “குறைந்தாகாமல் ” என்றும்; ஆகாயத்தில் வாயு சரிக்கும்போது அவ்வாகாயத்தையும் வாயுவையும் இவ்வாயுக்கட் டோன்றும் சீதள உட்டண முதலியவற்றையும் பிரித்துக் காணப்படும்; அவற்றின் நடு நின்றவாயு அந்த ஆகாயத்தில் அசைவற நிற்பின் முன் தோன்றிய பகுப்புக்கள் இன்றி அவ்வாகாயந் தானாயிருக்கும். அதுபோல, பெத்தகாலத்து முப்பொருள்கட்கும் நடுநின்ற ஆன்மபோதம் சீவிக்குமிடத்துச் சிவம் என்றும், பசு என்றும், பாசம் என்றும் பிரித்தறியப்படும்; முத்தி காலத்து அவ்வான்மபோதம் சீவியாது சிவத்துள் அடங்கின், முன் தோற்றிய பகுப்புக்கள் ஒன்றுந் தோற்றாது சிவந்தானாய் இருக்கும் ஆகலின், “ஆகாயமுங் காலும் போல அசைவற்றதேகாண் பரிபூரணம் ‘ என்றுங் கூறினார்.
காண் – முன்னிலை அசை.
இவ்விரண்டு திருவெண்பாவானும் பதி இலக்கணங் கூறியவாறு காண்க.
பதியானது சடசித்துக்கட்கெல்லாம் இடங்கொடுத்துக்கொண்டு எல்லாம் தானாயிருக்கும் என்றீர்; ஆனால், அட்டமூர்த்த முதலிய வடிவங்களும் அத்திருமேனிகளை வழிபடுவோர்க்கு அது கொடுக்கும் பயன் முதலியவும் யாவை எனின், மேற்கூறுகின்றார்.