எட்டுருவு மைந்தொழிலு மிச்சைவடி வும்பயனுஞ்
சுட்டரிய பூரணமுஞ் சுட்டுதலு – நிட்டைகளு
முன்னிழப்பி லின்ப முதித்தொடுங்கு மொன்றிரண்டும்
தன்னருட்கே யாமத் தனை.
(இ-ள்.) எட்டு உருவும் ஐந்தொழிலும் இச்சைவடிவும் பயனும் சுட்டரிய பூரணமும் சுட்டுதலும்- பிரபஞ்சம் எல்லாம் ஓர் வடிவமாய்க் கொண்டருளிய அட்டமூர்த்தமும், ரூபாரூபமாகிய சதாசிவம் செய்யும் ஐந்தொழில்களும், தமது சுதந்திர இச்சையால் திருமேனிகொண்ட உருவமாகிய மயேசுர வடிவும், இவ்வடிவுகளை வழிபடு வோர்க்கு இவரால் கொடுக்கப்படும் பதப்பிரயோசனங்களும், இவ்வடிவங்கள் எல்லாம் கடந்து ஆன்மபோதத்தால் சுட்டி அறிதற்கு அரிய அரூபமாகிய பரிபூரண சொரூபமும், சுட்டி அறியும்படி எழுந்தருளி வந்த குருவடிவும்,
நிட்டைகளும் உன் இழப்பில் இன்பம் உதித்து ஒடுங்கும் ஒன்று இரண்டும் அத்தனை தன் அருட்கே ஆம்- வீடடையும் நெறியாகக்கூறிய உபாய நிட்டைகளில் தோற்றுவனவும், உனது போத ஒழிவில் ஆநந்தத்தோற்ற அதனை அறிந்து அதனுள் அதீதப்படும் அத்துவிதம் என்பதும், இங்ஙனம் அதீதப்படுவதன் முன் தோற்றும் துவிதம் என்பதும், ஆகிய இவை அத்தனையும் அச்சிவத்தினது அருட்சத்தியால் உண்டாம்.
(வி-ரை.) “எட்டுரு” என்றது பஞ்சபூதங்களும் சந்திர சூரியரும் ஆன்மாவும் எனக்கொள்க.
இத்திருவெண்பாவால் பதியினது அருட்சத்தி இலக்கணங் கூறியவாறு காண்க.