மண்ணாதி சத்தாதி வாக்கு மனமாதி
கண்ணாதி நாதாந்தங் கண்டகன்ற – வுண்மை
தனையணு வென்றேயுணர்த்துஞ் சார்பினையுங்கண்ட
வுனையறிவென் றுள்ளே யுணர்.
(இ-ள்.) மண் ஆதி சத்தாதி வாக்கு மனம் ஆதி கண் ஆதி நாதாந்தம் கண்டு அகன்ற உண்மைதனை – பிருதிவி முதலிய பஞ்சபூதங்களும், சத்தாதி விடயங்களும், வாக்காதி கன்மேந்திரியங்களும், மனமாதி அந்தக் கரணங்களும், சட்சுவாதி ஞானேந்திரியங்களும், காலமாதி வித்தியாதத்துவங்களும், சுத்தவித்தை ஆதிநாதம் ஈறாய்ச் சொல்லப்பட்ட சிவதத்துவங்களும், ஆகிய இம்முப்பத்தாறையும் அடிதொடங்கி வேறு வேறாய் ரூபதரிசனம் பண்ணி அறிந்து, அவையெல்லாம் தான் அன்றென்று நீக்கி, அவற்றின் முடிவில் நின்ற சைதன்னியத்தை,
அணு என்றே உணர்த்தும் சார்பினையும் கண்ட உனை அறிவு என்று உள்ளே உணர்-ஆன்மா என்று உனக்கு அறிவிக்கும் திருவருளையும், அவ்வருளால் முன் கண்டு நீங்கிய கருவிகள் இவை என்றும், கண்ட உன்னை அறிவென்று உனக்குள்ளே அறி.
(வி-ரை.) கருவிகள் முப்பத்தாறும் ஒன்றை ஒன்று அறியாமையானும், தத்தம் குணங்களைத் தாம் அறியாமையானும், காட்சி கண்ணை அறியாதது போல் அவைகள் ஆன்மாவை அறியா ஆகலானும், கண் காட்சிகளை அறிவதுபோலக் கருவிகளை ஈது ஈதென்று பகுத்து அறிந்து நீங்கிநின்றது ஆன்மா ஆகலானும், “நாதாந்தங் கண்டகன்ற உண்மைதனை” என்றார். தன்னால் அறியப்பட்ட கருவிகளைச் சடமென்றும், அவற்றைத் தனக்கு அறிவித்தது அருளென்றும், அக்கருவிகள் போல் சடமும் அன்றித் திருவருளைப்போல் பேரறிவும் அன்றி நின்று அறிந்த அறிவு தான் என்றும்,
தன்னையும் பாசத்தையும் திருவருளையும் அவ்வருளால் கண்டமையால், “உணர்த்துஞ்சார்பினையும் ” என்றார்.
தத்துவங்களை எல்லாம் பகுத்துக் கூறினமையால் வித்தியாதத்துவம் வருவிக்கப்பட்டது. அறிவோடுங்கூடி அறிவாயிருத்தலின் ஆன்மாவையும் அறிவென்றார்.
இத்திருவெண்பாவால் ஆன்மா ஈதென்று அறிவித்தவாறு காண்க.