அஞ்சுதொழி லாவதுவே யஞ்சவத்தை கிஞ்சலிலா
வஞ்சிடத்துங் கொள்ளிவட்ட மாகவே – பஞ்சவன்னம்
வைத்த படிகம்போன் மாறாதுனை மயக்கல்
சித்திரக்கூத் தாகத் தெளி.
(இ-ள்.) அஞ்சுதொழில் ஆவதுவே அஞ்சு அவத்தை கிஞ்சல் இலா அஞ்சு இடத்தும் கொள்ளிவட்டம் ஆகவே –சிவனது பஞ்சகிருத்தியங்கள் யாவை எனின், சாக்கிர முதலிய அஞ்சவத்தைகளுமாம். சுருக்கமில்லாத இவ்வஞ்சவத்தைகளிடத்தும் கொள்ளிவட்டம் போலாக அதி சீக்கிரமாய் மாறிமாறிவரச் சுழற்றி,
பஞ்சவன்னம் வைத்த படிகம்போல் மாறாது உனை மயக்கல் சித்திரக்கூத்து ஆகத்தெளி- வைக்கப்பட்ட பஞ்ச வன்னத்தின் மயமாம் படிகம்போல நீ சேர்ந்த அவத்தை யாது அதன் மயமாக்கி இடையறாது உன்னை மயக்குதல் அவனது அழகிய திருக்கூத்தாக அறிதி.
(வி-ரை.) முப்பத்தாறு கருவிகளோடும் ஆன்மா தேகபோகங்களை அறிதலின், சாக்கிரத்தைச் சிருஷ்டியாயும், இச்சாக்கிரத்தில் புசித்த வாசனை சொப்பனத்தும் அறிந்து நிற்றலான், இதனைத் திதியாயும், இச்சொப்பனம் போல் சிறிது நிழலெழத்தோன்றி மறைதலால், சுழுத்தியைச் சங்காரமாயும், பிராணவாயு இயக்கம் இன்றி ஒன்றுந்தோன் றாது இருத்தலால், துரியத்தைத் திரோபாவமாயும், அதீதம் கருவிகள் ஏதும் இன்றி ஆணவ இருளாயிருந்ததாயினும் அதன் நிமித்தமாய் மாயையில் தநுவாதி கொடுத்தல், இருவினை ஒப்பு வருவித்தல், ஆசாரிய மூர்த்தமாய் வந்து உபதேசித்தல் முதலிய அநுக்கிரகம் பெறுதலின், இவ்வதீதத்தை அநுக்கிரகமாயுங் கூறினார்.
“கிஞ்சலிலா’ என்கிற விதப்பான், உடல் தோன்றி நின்று அழிவது, சிருஷ்டி, திதி, சங்காரம், உயிருள் மயக்கமும் தெளிவும் வருவன திரோபவ அநுக்கிரகம். இங்ஙனம் உடலின் மூன்றும், உயிரின் இரண்டுமாக வருவனவும்,
ஓர் இந்திரியத்தில் ஆன்மா பிரவேசித்தல் சிருஷ்டி, அதனால் அறியும் விஷயத்தை அநுபவித்தல் திதி, அவ்விஷயமயமாய் அழுந்துதல் சங்காரம் ; அதனில் ருசிப்பித்தல் திரோபவம், அதனைத் தெளிந்து கோடல் அநுக்கிரகம், இங்ஙனம் இந்திரியங்கள் தோறும் வருவனவும்,
மனத்தான் ஓர் பொருளை நினைத்தல் சிருஷ்டி, அப்பொருளில் பிரியம் பிறத்தல் திதி, அஃது எப்போது வருமென்று திகைத்து நிற்றல் சங்காரம், அப்பொருளில் மயங்குதல் திரோபவம், அதனைத் தெளிந்துகோடல் அநுக்கிரகம், இங்ஙனம் கரணத்தில் வருவனவும், இவை முதலிய பெத்தத்தில் வரும் பஞ்ச கிருத்தியங்களும்,
முத்தியில் அருள்வடிவமாதல் சிருஷ்டி, ஆநந்தப்பேறு திதி, இதில் அதீதப்படுதல் சங்காரம், ஞாதுரு ஞானம் ஞேய மென்னும் மூன்று தோன்றாதிருத்தல் திரோபவம், இவை நான்கும் எக்காலமும் விளங்கல் அநுக்கிரகம்; ஆகிய இம் முறையே வருவனவுங் கொள்க.
இத்திருவெண்பாவால் பஞ்சகிருத்தியத்தால் அவத்தைகள் நிகழ்வன என்று அறிவித்தவாறு காண்க.