ஒழுவிலொடுக்கம்

35. பழுதையைப்பாம் பென்ற பயம் போனாற் பாவித்

பழுதையைப்பாம் பென்ற பயம் போனாற் பாவித்
தழுதுடம்பை யாட்டுகினு மாமோ – தொழிலொழிவி
னின்றசிவ யோகி நினைத்தொருகா னீவாரா
யென்றழைத்தா லும்பதையா தென்.

(இ-ள்.) பழுதையைப் பாம்பு என்ற பயம் போனால் பாவித்து அழுது உடம்பை ஆட்டுகினும் ஆமோ — இருளால் பழுதையைப் பாம்பென்று கண்ட பயகம்பனாதிகள் சுடரால் பழுதையென்று அறிந்து போனால் இப்போது சுடரால் அறிந்த பழுதையில் முன்னிருளால் தோற்றிய பாம்பு இருப்பதாய்ப் பாவித்துப் பயந்தது போல் அழுது உடலை நடுக்கினும் முன் போலும் பயகம்பனாதிகள் உண்டாகா; (அதுபோலும்),

தொழில் ஒழிவில் நின்ற சிவயோகி நினைத்து ஒருகால் நீ வாராய் என்று அழைத்தாலும் பதையாது என்- முன் மல இருளால் மெய்போல் தோற்றிய அவத்தைகளை எல்லாம், இப்போது ஞானசூரியனால் பொய்யாகக்கண்டு அவ்வவத்தைகளை நடத்தும் பஞ்ச கிருத்தியங்களையும் கடந்து மேல் நின்ற சிவத்தில் அதீதப்பட்ட சிவயோகி கருதி, அவத்தாய்! ஒருதரம் மீட்டு இங்கு நீ வருதி என்று அழைப்பினும், (முன் அழையா திருக்கவும் தானே வந்து கொள்ளி வட்டம் போல் சுழன்றது) இப்போது அணுவளவேனும் அசையாதிருந்தது, ஈதென்கொலோ! (யாம் அறிகிலோம்).

(வி-ரை.) சிவயோகிக்குச் சீவகாருணிய முதலிவற்றால் மௌனாநந்தம் ததும்பிற்றாயினும், திருவருள் வடிவாய் நிற்பதன்றி மாயா வடிவம் ஆகான் ஆகலினும், சூரியப் பிரகாசத்து இருள் தோற்றாது. அதுபோல ஞானப்பிரகாசத்தில் மாயாந்தகாரம் தோற்றமாட்டாது ஆகலினும், “அழைத்தாலும் ” என்றும், “பதையாது” என்றுங்கூறினார்.

இத்திருவெண்பாவால் சிவயோகியை அவத்தைகள் சாரமாட்டா என்று அறிவித்தவாறு காண்க.

இங்ஙனம் இருந்த சிவயோகிக்கு உபதேசித்தல் முதலியவற்றால் தான் பிறர் என்று தோற்றுவது என்னெனின் மேற் கூறுகின்றார்.