மாயா விகார மதுபானம் போன்று மயக்
கோயாத துன்னா லொழியுமோ – நீயதுவாய்ப்
போகாம லாடும் பவுரியவன் பொய்க்காட்சி
யாகாது போலே யறி.
(இ-ள்.) மாயாவிகாரம் மதுபானம் போன்று மயக்கு ஓயாது அது உன்னால் ஒழியுமோ – முற்கூறிய அவத்தை மாயாகாரியமாகிய கருவிக்கூட்டங்களினது சேட்டை, அது, மதுபானங் கொண்டவனது நற்குணத்தை மாறுபடுத் தித் தனது லகிரிமேலிட்டு அவனை மயக்குதல் போன்று, உனது ஞானகுணத்தை மாறுபடுத்தித் தனது குண மேலிட்டு உன்னை ஒழிவற நின்று மயக்கும்; அதனை உன் னால் ஒழியக்கூடுமோ?
(ஆனால் நீர் இங்ஙனங்கூறிய ஆற்றான் அதனை ஒழிக்க வேண்டாவோ எனின், அதனை ஒழியாது ஒழித்தற்கு உபா யம் உண்டு, அஃது எங்கனம் எனின்),
நீ அது ஆய்ப்போகாமல் ஆடும் பவுரியவன் பொய்க்காட்சி ஆகாது போலே அறி-ஆடப்பட்ட ஓர் பார்ப்பனக்கூத்தன் தோட்டி வேடம் போட்டான் ஆயினும், அப்பொய் வேடக்காட்சி தான் ஆகாது தன்னை வேறு கண்டு நின்றாற்போல், அவத்தையுள் இருத்தி எனினும் நீ அதன் மயமாய்ப் போகாது உன்னை வேறுபிரித்து அறிதி எனின், அஃது உன்னை மயக்காது என்று அறிதி.
(வி-ரை.) இங்ஙனம் பிரித்து நிற்றல் சாக்கிராவத்தையில் அன்றிச் சொப்பனாதிகளில் கூடாதெனினும், அச்சாக்கிராவத்தையைப் பிரித்து நிற்பின் திருவருள் தோற்றும், இத் தோற்றம் மேலிடின் அச்சாக்கிராவத்தை மறையும், அது மறையவே அதனது வாசனையான சொப்பனாதிகள் தோன்றா; ஆகலின், பொதுப்படக் கூறினார்.
இத்திருவெண்பாவால் அவத்தை நீங்கி நிற்றற்கு உபாயங் கூறியவாறு காண்க.
பஞ்ச கிருத்தியத்தான் உண்டாம் அஞ்சவத்தையுங் கடந்து சிவத்தில் அதீதப்பட்டு நின்றார்க்கு ஓரோர் காலத்து ஒரோரவத்தைகள் தோன்றாவோ எனின், மேற் கூறு கின்றார்.