ஊன்றி னிலமசையி னாத மொழிந்தசிவந்
தோன்றாத் துணையுனக்குத் தோன்றுமோ – தோன்றின்
விரனு தியைத் தீண்டுவதுபோல் வாய் முகத்தை மென்று
சிரிப்பது போற் பார்த்துத் தெளி.
(இ-ள்.) ஊன்றின் நிலம் அசையின் நாதம் ஒழிந்த சிவம் தோன்றாத்துணை உனக்குத் தோன்றுமோ தோன்றில்- ஓர் தண்டால் ஊன்றின் சடமாய் உள்ள நிலமும் அசையும் எனின், எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவாகிய நாததத்துவத்தையுங் கடந்து உனதுயிர்க்குள் தோன்றாத் துணையாயிருந்த சிவத்தை உன் போதத்தை ஊன்றி நின்று அறிவேன் எனின், அஃதுனக்குத் தோன்றுமோ? உன் போதத்துக்கு அது தோற்றும் எனின்,
விரல் நுதியைத் தீண்டுவது போல் வாய் முகத்தை மென்று சிரிப்பது போல் பார்த்துத் தெளி-ஓர் விரல் தன்னுனியைத் தான் தொடல்போலும், முகத்தின்கண் இருந்த வாய் அம் முகத்தை எதிரிட்டுக் கறித்து மென்று சிரிப்பது போலும் ஆம், இதனை ஆராய்ந்து தெளிந்து அறிதி.
(வி-ரை.) நுட்பத்தான் ஆன்மாவுள்ளும், பூரணத்தால் அதற்குப் புறம்புமாய்ப் பிரிபடாது சிவம் இருத்தலின், ஆன்மாவால் அதனைப் பிரித்தறியக்கூடாது ஆகலின், இங்கனம் உவமை கூறினார்.
“சிரிப்பது” யான் சிவத்தை அறிந்தேன் என்று பிறருக்குக் கூறி மகிழ்தல்.