பற்றியது தானாம் படிக நீ பற்றுவிடப்
பற்றை யெதிரிட்டுப் பார்த்தாலென் – சற்றும்
பிறியாச் சிவனைப் பிறித்தறியத் தேடு
மறியாமை காணா ணவம்.
(இ-ள்.) பற்றியது தான் ஆம் படிகம் நீ பற்றுவிடப் பற்றை எதிரிட்டுப் பார்த்தால் என்-தன்னைச் சார்ந்த நிறம் யாது அந்நிறம் தானாயிருக்கும் படிகம் போலும், யாதோர் கருவி அடுத்தது அதன் மயமாவை நீ, அக்கருவிகள் நீங்குதற்பொருட்டு உனக்குள் இருந்த சிவமாகிய பற்றை எதிரிட்டுப் பார்த்ததனால் பயன் என்னையுளது?
சற்றும் பிறியாச்சிவனைப் பிறித்து அறியத்தேடும் அறியாமை ஆணவம்- ஓரணுவளவேனும் உன்னை விட்டுப் பிரியாதிருந்த சிவத்தை உன் போதத்தாற் பிரித்து உன்னை விட அஃதோர் முதலாய்க்கண்டு அதனை அறியத்தேடும் பேதமை ஆணவமாவது.
(வி-ரை.) கேவல சகலங்களை நீங்கி அருளால் தன்னை உள்ளபடி அறிந்த ஆன்மா தனக்கு வேறற இருந்த சிவத்தையும் அவ்வருளால் அறியவேண்டும். அதனைக் குரு உப தேசத்தால் அறிந்து கொள்க. அருளால் அறியவேண்டு மென்பதனை,
“அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே யறிவுதனை யருளினா லறியாதே யறிந்து” என்னும் சித்தியாருள்ளுங் காண்க.
சிவத்தைப் பிரியாது அதனுள் அடங்கின் கருவிகள் தொடரா, அதனைப் பிரிக்கின் தொடரும், ஆகலின், “பற்று விடப் பற்றை எதிரிட்டுப் பார்த்தாலென்” என்றார்.
ஆங்கு மலம் இன்றாயினும் அதனது வாசனையால் போதம் எழுதலின், ‘அறியாமைகா ணாணவம்” என்றார். ஆன்மாவைப் பற்றுவிடாதிருத்தலின், சிவத்தைப் பற்று” என்றார்.
காண் – அசை.
இவ்விரண்டு திருவெண்பாவானும் திருவருளால் சிவத்தை அறியும்போதும் சிறிதும் போதஞ் சீவியாது நின்று அறியவேண்டுமென்று கூறியவாறு காண்க.
அந்தச் சிவத்தைச் சென்று அடையும் இடம் எவ்விடம் எனின், மேற் கூறுகின்றார்.