தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமா
யென்னொழிவி லின்புமா யின்புமிது – வென்னாத
வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றா
னோதாமல் வேதமுணர்ந் தோன்.
(இ-ள்.) தன்மையும் முன்னிலையும் தான் ஆய்ப் படர்க்கையும் ஆய் என் ஒழிவில் இன்பும் ஆய் இன்பும் இது என்னாத – உயிருக்கு உயிராயிருந்து அறிவிக்கும் திருவருளாகிய தன்மையும் தானாகி, அவ்வருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளிவந்த ஆசாரியராகிய முன்னிலையும் தானாகி, அவ்வருள் மிகுந்து கூறப்பட்ட வேதாகமங்களா கிய படர்க்கையும் தானாகி, இச் சுருதி குரு சுவாநுபவங்களால் எனது போதவொழிவில் தோன்றும் ஆநந்தமும் தானாகி, அவ்வாநந்தம் இதுவென்றும் கூறக்கூடாத ஆநந்த தாதீதமும் தானாகி எழுந்தருளியிருந்த,
ஓதாமல் வேதம் உணர்ந்தோன் வேதாந்த சித்தாந்தமே பிறவாவீடு என்றான்- ஓதி அறியாமல் தமது திருவருள் ஞானத்தால் நான்கு வேதங்களையும் முழுதுணர்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் இந்த அநுபவமுற்றும் உண்டான வேதத்தின் முடிவாகிய சித்தாந்தமே மீண்டு வாரா முத்தி என்று அருளிச்செய்தார்.
(வி-ரை.) எல்லாம் தாமாகி என்றது அவரது சுதந்திரம் அறிவித்தது. ஓதி உணர்ந்தோரைப் பற்ற ஓதாமல் உணர்ந்தோர்க்கு உண்மையெல்லாம் உள்ளபடி தெரியும். இங்ஙனம் ஓதாமல் உணர்ந்தோரே இதுவே பிறவாவீடென்று கூறினமையால், இஃது உண்மைமுத்தியென்று அறிந்து கொள்க.
வியாசர் முதலியோர் ஓதாமல் உணரினும் அவர்க்கு விட்டுணு பரமென்றும் அகம் பிரமம் என்றும் பின்னர் மலைவு பிறந்தது ஆகலின், இவரைப்போலும் அவர் சுதந்திர அறிவிலர் எனக்கொள்க.