மலையேறிப் போவார்க்கு மாநிலமாய்த் தோன்றிக்
கலையாதி யைக்கழற்றிக் காட்டித் – தொலைவிலே
காட்சியொழித் தென்னைக் கரந்தகலா வாதனையின்
மாட்சி சொலின் மோனமாம் வந்து.
(இ-ள்.) மலை ஏறிப்போவார்க்கு மாநிலமாய்த் தோன்றிக்கலை ஆதியைக் கழற்றிக் காட்டித் தொலைவிலே காட்சி ஒழித்து- மாநிலத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்வோர்க்கு ஆண்டு மாநிலமாய்த்தோற்றி அம்மலை முடிமேல் ஏறி நின்று மீண்டு பார்க்குமிடத்து முன்னிருந்தமாநிலமும் பின் வந்த மலையிடமும் தாம் நின்ற இடத்திற்குக் கீழ்ப்பட்டு அருகில் தோற்றுமாப்போலும், கலை முதலிய ஆறத்துவாவையுஞ் சோதனை பண்ணி நீக்கி இவற்றின் முடிவில் நின்ற ஆன்மாவை அறிதல் முதலிய அநுபவங்களைக் காட்டி, இவ்வநுபவ முடிவிலே முன் தோன்றிய கருவிகளும் பின் தோன்றிய அநுபவங்களும் ஆகிய காட்சிகள் எனக்குத் தோற்றாவாறு ஒழித்து,
வாதனையில் என்னைக் கரந்து அகலா மாட்சிசொலின் வந்து மோனம் ஆம்- எனக்கு ஓர் வாதனையும் இல்லாது என்னைத் தமது பூரணாநந்தத்து ஒளித்து உள்ளும் புறம்புமாய் எழுந்தருளியிருந்த எனது ஆசாரியரது பெருமையைச் சொல்லுமிடத்து அதனைச்சொல்லவொட்டாது என்னைப் பேராநந்தம் வந்து மௌனம் ஆக்கும், (இதென் கொலோ அறிகிலேன்)
(வி-ரை.) “தொலைவிலே காட்சியொழித்து” என்றமையால், மலை முடிமேல் ஏறிநின்று பார்க்குமிடத்து என்றும் வருவிக்கப்பட்டது.
கலையாதி ஆறு அத்துவாவாவன மந்திரம் பதினொன்றும், பதம் எண்பத்தொன்றும், வன்னம் ஐம்பத்தொன்றும், புவனம் இருநூற்றிருபத்து நாலும், தத்துவம் முப்பத்தாறும், கலை ஐந்தும் எனக்கொள்க.
அநுபவ முடிவு சொல்லக் கூடாமையின், “மோனமாம் வந்து” என்றார்.