ஒழுவிலொடுக்கம்

45. அறிவித்தா லன்றி யறியாய் நீ யென்றான்

அறிவித்தா லன்றி யறியாய் நீ யென்றான்
மறவைக் கதுவே மருந்தா – யறியவெனி
லாகாய மெய்யவைத்த வம்பா மறிவெனிலு
மாகாய வாக்கா மது.

(இ-ள்.) அறிவித்தால் அன்றி அறியாய் நீ என்றான் மறவைக்கு அதுவே மருந்து ஆய் அறிய எனில் ஆகாயம் எய்யவைத்த அம்பு ஆம்- உனது உயிருக்கு உயிராயிருந்து யாம் ஒன்றினை அறிவித்தால் நீ அறிவதே அன்றி உன் சுதந்தரமாய் ஒன்றினையும் அறியாய் என்று அருளிச்செய்தார்.

யான் எனது என்று எழும் மலப்பிணியை நீக்குதற்கு அத்திருவாக்கே மருந்தாய் இங்ஙனம் அறிவிக்குந்தம்மையான் அறியத் தொடங்கின், யான் இருத்தற்கு இடமும் தம்மை அறிதற்கு எழும் போதத்திற்கு இடமும் தமதிடமே அன்றி வேறுகாணேன் ஆகலின், ஆகாயம் இலக்காய் அதனை எய்யவைத்த அம்பு போலும் ஆகும்;

(இங்ஙனம் உயிர்க்குயிராயிருந்து அறிவிப்பதாய் எதிரிட்டு அறியக்கூடாததாய் இருந்த அறிவின்கண் வாக்குத் தோற்றுவது எங்கனம் எனின்)

அறிவு எனிலும் ஆகாயவாக்கு ஆம் அது அவர் அங்ஙனம் இருந்த அறிவே எனினும் அவ்வறிவின்கண் நின்ற காருண்ணியத்தால் தோற்றும் வாக்கும் அவ்வாகாய வாக்குப்போலும்.

(வி-ரை) அம்பிற்கு எய்யாமுன் நிற்பதற்கு இடமும், எய்தபின் சேரற்கு இடமும் அவ்வாகாயமே அன்றி வேறு இன்மையால், இதனை அதற்கு உவமையாகக் கூறினார்.

வாக்காற் கூறியது போற் பிறர்க்குத் தோற்றுவதே அன்றி அவர்க்குத் தோற்றாது ஆகலின், “ஆகாய வாக்காமது” என்றார். “தன்மையும் முன்னிலையும்” என்னும் திருவெண்பா முதல் இந்நான்கு திருவெண்பாவானும் தமது ஆசாரியர் தமக்கு அருளிச்செய்த நிலை கூறியவாறு கண்க.