ஒழுவிலொடுக்கம்

44. இதுவென்ற தெல்லாம் பொய் யென்றா னெனக்குப்

இதுவென்ற தெல்லாம் பொய் யென்றா னெனக்குப்
பொதுவன்றித் தங்குமிடம் போச்சு – வதுநாங்கா
ணென்றா னதன்பேரி ரவைப் பகலாக்கு
மொன்றோ பரமசுக மோ.

(இ-ள்.) இது என்றது எல்லாம் பொய் என்றான் எனக்குப் பொது அன்றித் தங்கும் இடம் போச்சு- ஈது ஈதென்று உன் போதத்தால் சுட்டி அறிந்தது யாது அஃதெல்லாம் பொய் என்றார். இங்ஙனம் அருளிச்செய்தவாற்றான் என் போதத்தால் சுட்டி அறிதற்கு அரிதாய் எல்லாவற்றுள்ளும் பொதுவாய் இருந்த திருவருளிடமே அன்றி முன்னர்க்கருவிகள் தோறும் அதனதன் மயமாய்த்தங்கும் இடமெல்லாம் இப்போது போயிற்று.

அது நாம் என்றான் அதன் பேர் இரவைப் பகல் ஆக்கும் ஒன்றோ பரமசுகமோ- முன் கருவிகளோடுங்கூடிக் கருவிமயமாயும், இப்போது அருளோடுங்கூடி அருள் மயமாயும், அவற்றைப் பாசமென்றும் இதனை அருளென்றும் இருந்தறிந்த ஓரறிவு உண்டே அவ்வறிவு எம்மைவிட வேறோர் முதல் அன்று, அதுவே நாம் என்று எமதாசாரியர் அருளிச்செய்தார். அங்ஙனம் அருளிச்செய்த திருப்பெயருக்கு அருத்தம் என்னை! இற்றைவரையும் மறைத்திருந்த ஆணவ இரவைப் பகலாக்கும் ஞானசூரியனோ? அஃதன்றி என்னால் ஒழிக்கக்கூடாதிருந்த தற்போதத்தை விழுங்கி எழுந்த பரமாநந்த சாகரமோ? (யான் அறிகிலேன்).

(வி-ரை.) பகுப்பின்றி எல்லாவற்றுள்ளும் பொதுவாய் இருத்தலின், அருளைப் “பொது” என்றார். “அது நாங்காண்” என்றது ஆன்மாவைச் சிவத்தோடு இரண்டற்ற ஐக்கியங் கூட்டியது எனக்கொள்க.