ஒழுவிலொடுக்கம்

47. போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும்

போதம் பதைப்பறவே பூரணமாம் பூரணமும்
போதம் பதைத் தளவே பொய்யாகு – மீது
விழித்திமைப்பா நின்றால் வெளியசைந்தாற் காற்றாம்
பழக்கமதைச் சாட்சியைப் போற் பார்.

(இ-ள்.) போதம் பதைப்பு அறவே பூரணம் ஆம் பூரணமும் போதம் பதைத்த அளவே பொய் ஆகும் ஈது நின்றால் விழித்து இமைப்பு ஆம்-ஆன்மபோதம் சீவியாது அடங்கின் அவ்வான்மா தோற்றாமல் அருட்பூரணம் தானாயிருக்கும். அப்பூரணமும் அப்போதம் சீவித்தமாத்திரத்தில் தான் தோற்றாது மறையும், அவ்வான்மாவாயிருக்கும், இங்ஙனம் இப்போதம் அடங்கியும் விரிந்தும் நின்றால் அப்பூரணம் ஓர்கால் தோற்றியும், ஓர் கால் மறைந்தும் விழித்தல்போலும் இமைத்தல் போலும் ஆம்; (அஃது எங்ஙனம் எனின்),

வெளி அசைந்தால் காற்று ஆம் பழக்கமதைச்சாட்சியைப் போல் பார்- வெளியில் அடங்கிய காற்றுத்தான் வேறொரு பொருளாய்த் தோற்றாமல் வெளியே ஆம், அவ் வெளியில் நின்றும் அசைந்தால் அதனை விடத்தான் ஒரு பொருளாய்க் காற்றென்பதாம், இக்காற்றாகிய சாட்சியைப்போல் உனது போதம் அருளில் அடங்கியும் விரிந்தும் நின்ற பழக்கமதையும் பார்த்து அறிதி.

(வி-ரை.) போதம் அடங்கில் அருளாகியும், அஃது அசையில் ஆன்மாவாகியும், இங்ஙனம் வருதலின், அதனைச் சிறிதுந் தோன்றாது அடக்க வேண்டுமென்பது கருத்து.

இவையிரண்டு திருவெண்பாவானும் மும்மலங்களை நீக்குதற்கு உபாயமும், இம்மலங்களை நீக்கி அவ்வான்மா தற்போதமுங்கெட்டு ஆநந்தாதீதப்பட்டால் அதற்குமேல் வேறுநிட்டை இன்றென்பதும், ஆன்மா கருவிகள் தாக்காது நிற்றற்கு உபாயமும், அடங்கிய போதம் மீட்டும் விரியாது அடக்கவேண்டும் என்பதும் அறிவித்தவாறு காண்க.