வேதாந்தம் போலிருக்கும் வேதாந்த சித்தாந்த
நாதாந்தபோத நழுவினர்க்கு – நேதி
தனைக்கழன்று தற்போதஞ் சார்பழியுஞ் சந்தி
லுனக்கறிவா னந்தமுதிக் கும்.
(இ-ள்.) நாதாந்த போதம் நழுவினர்க்கு வேதாந்தம் போல் இருக்கும் வேதாந்த சித்தாந்தம் – நாத தத்துவத்தின் முடிவாயிருந்த அருளையுங்கடந்த மெய்ஞ்ஞானி கட்கு வேதாந்தம் போல் துவிதநாட்டம் இன்றி இருக்கும் வேதத்தின் முடிவாகிய இச்சித்தாந்த நூல் ஆகலின்,
நேதிதனைக் கழன்று தற்போதம் சார்பு அழியும் சந்தில் உனக்கு அறிவு ஆநந்தம் உதிக்கும் – நீக்குவதாய் உள்ள தத்துவ முப்பத்தாறையுங் கழன்று அவற்றின் முடிவில் நின்ற அருளையும் பரையையும் துவிதநாட்டம் இன்றிக்கழன்று நிற்றி எனின், நின் தற்போதமும் ஆணவ வாசனையாகிய சார்பும் ஒழியும், இவை ஒழிந்த இடத்திற்கும் அதீதத்திற்கும் இடையாகிய சந்தியில் உனக்கு ஞானாநந்தம் தோன்றும்,
(வி-ரை.) முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்குமளவும் ஆன்மபோதஞ் சீவித்தறிவது, அருள் தரிசன முதல் ஆநந்தாதீதப்படுமளவும் அப்போதஞ் சீவியாதடங்கி அவ் வநுபவங்களைப் பெறவேண்டும் ஆகலின், வேதாந்தம் போலிருக்கும்” என்றார்.
இத்திருவெண்பாவால் ஆநந்தம் தோன்றுமிடம் அறிவித்தவாறு காண்க