வெற்றவெறு மாநந்த மேலிடே கேவலத்தி
னிற்பது போ லந்த நிலைகழன்றோர் – சிற்போத
வண்டங் கடந்த வமுதத்தி னோடுலவும்
வெண்டிங்க ளுங்கிரண மும்.
(இ-ள்.) வெற்ற வெறும் ஆந்தமேல் ஈடே கேவலத்தில் நிற்பது போல் அந்த நிலை கழன்றோர் – நியதியிட்ட இடமெல்லாங் கழன்று சென்று தற்போதம் ஒழிந்ததெல்லாம் ஆநந்தமயமாய்த் தோற்றும் ஆகலின், வெற்றவெறும் ஆநந்த மேலீடாகிய இடமே கேவலாவத்தைப்பட்டு நிற்பது போலத்தோன்றும், இங்ஙனந் தோற்றும் அவ்வாநந்த மேலீடாகிய நிலையும் நீங்கினோர்,
சிற்போத அண்டம் கடந்த அமுதத்தினோடு உலவும் வெள்திங்களும் கிரணமும் – அருளும் பரையும் ஆகிய ஞானாகாசத்தைக் கடந்துநின்ற ஆநந்தாமிர்தத்தோடு விளங்காகின்ற சிவசந்திரனோடும் தாம் அதனை விட்டு நீங்காத அந்த ஆநந்தாமிர்த கிரணமாகி நிற்பர்.
(வி-ரை.) ஆநந்தம் மேலிட்டபோது பிரபஞ்சமெல்லாம் ஆநந்தமயமாய்த் தோற்றும் ஆகலின், “வெற்றவெறுமாநந்தம்” என்றார். ஆநந்தமேலீடு விட்டுதியாமல் தோற்றுவது. கேவலாவத்தை அநுபவத்தை அறிந்து ஒன்றுந்தோன்றா திருந்த தென்று சொல்ல வருதல் போல், ஆநந்தாநுபவம் சொல்லவருதலால், “கேவலத்தினிற்பது போல் என்றார். அநாதியில் ஆணவமலத்தால் மறைப்பட்டிருந்த உயிர்க்கு அநுபவஞ் சொல்லக்கூடாதது போல், சிவத்தில் இரண்டறக் கலந்து நின்ற அநுபவஞ் சொல்லக்கூடாது ஆகலின், ஆநந்தாநுபவத்திற்கு உவமை கேவலாவத்தையைக் கூறினார்.
“வெண்டிங்களுங் கிரணமும்” என்று உவமை கூறினமையால் சந்திரனைப்போலச் சிவம், அவனை விட்டு நீங்காத அமுதம் போல் ஆந்தம், அவனையும் அமுதத்தையும் விட்டு நீங்காத கிரணம்போல் ஆன்மா சிவத்தோடு இரண்டறக் கலந்து நின்ற நிலை எனக்கொள்க.
இவையிரண்டு திருவெண்பாவானும் முத்தியில் ஒன்றென்றும் இரண்டென்றுங் கூறக்கூடாதென்று அறிவித்த வாறு காண்க.