ஒழுவிலொடுக்கம்

49. தத்துவா தீதத் திமிர்ப்படங்கித் தற்செலவு

தத்துவா தீதத் திமிர்ப்படங்கித் தற்செலவு
மத்தின் வரத்து மசையாத – சுத்தத்தை
யொன்றென்றா னீசற் றுளதாவை யாதலினா
லன்றென்ற தென்றே யறி.

(இ-ள்.) தத்துவாதீதத்திமிர்ப்பு அடங்கித் தன் செலவும் அத்தின் வரத்தும் அசையாத – முப்பத்தாறுதத்துவத்திற்கும் அதீதமாயிருந்த ஆணவமல வாசனை எல்லாம் நீங்கியவிடத்து ஆன்மா சிவத்தைச் சென்று கூடுதலும், சிவம் ஆன்மாவை வந்து பொருந்துதலும் ஆகிய இருவகை அசைவும் இன்றி இரண்டற்று இருந்த,

சுத்தத்தை ஒன்று என்றால் நீ சற்று உளது ஆவை ஆதலினால் அன்று என்றது என்றே அறி- முத்திக்கண் சிவம் ஒன்றுமே என்று கூறுதி எனின், அச்சிவம் ஒன் றென்று அறிந்து கூறிய நீயும் சிறிது உண்டாவை ஆகலின், அம்முத்திக்கண் அங்ஙனங் கூறுவதும் அன்றென்று என்று அறிதி.

(வி-ரை.) உடம்பின் குணம் அன்றி அதன்கண் ஏறியிருந்த திமிர்ப்புப் போல், உயிரின் குணம் அன்றி இதன் கண் ஏறியிருந்தமையால், ஆணவத்தைத் “திமிர்ப்பு” என்றார். திமிர்ப்பு அடங்காவிடத்துக் கூடினது போன்றும், பிரிந்தது போன்றும் அநுபவந்தோன்றலின், அங்ஙனங் கூறினார்.