ஒழுவிலொடுக்கம்

53. சிந்தை பயமிலச்சை சீல மருவருப்பு

சிந்தை பயமிலச்சை சீல மருவருப்பு
அந்தைவிடுஞ் சாந்தி குல மாசார – மிந்தவழி
யெட்டுஞ் சிவயோகிக் கில்லையென மாமறைக
டட்டும் பெருமுரசந் தான்.

(இ-ள்.) சிந்தை பயம் இலச்சை சீலம் அருவருப்பு அந்தைவிடும் சாந்தி குலம் ஆசாரம் இந்த வழி எட்டும்- எனக்கு இன்னதுவேண்டும் என்னுஞ் சிந்தனையும், துஷ்ட மிருகாதி தோன்றியக்கால் அச்சமும், இன்னார் இன்னது சொல்லப்போகிறார் என்னும் நாணமும், சாந்திராயண விரத முதலிய சீலமும், ஈது அசுத்தமென்னும் அருவருப்பும், அகந்தையாற் செய்த பாவந்தீர்க்கும் புண்ணியம் ஈதென்று செய்யுஞ் சாந்தியும், குலாசாரமும் சமயாசாரமும் ஆகிய இந்த மார்க்கம் எண்வகையும்,

சிவயோகிக்கு இல்லை என மாமறைகள் பெருமுரசம் தட்டும் – சிவத்தோடு இரண்டறக்கூடிநின்ற சிவயோகிக்கு இல்லையென்று மாமறைகளாகிய பெரிய பேரிகை முழக்கும்.

(வி-ரை.) “மாமறைகள் தட்டும் பெருமுரசம்” என்றது அவர்க்கில்லை என்று பலப்படக் கூறுதல். இவை எட்டும் சிவத்திற்கு இன்றாகலின், அதனை அடைந்த சிவயோகிக்கும் இன்றென்பது ஆயிற்று.

தான்- அசை