ஒழுவிலொடுக்கம்

54. தத்துவத்தா ரல்லார் சலசந் திரனொப்பார்

தத்துவத்தா ரல்லார் சலசந் திரனொப்பார்
தத்துவத்தார் செய்யுந் தவாதவங்கள் – சுத்தக்
ககன மழை யாற்கழுவிக் காற்றைக் கனலாற்
றகனஞ் செயல்போற் றெளி.

(இ-ள்.) தத்துவத்தார் அல்லார் சலசந்திரன் ஒப்பார் தத்துவத்தார் செய்யும் தவாதவங்கள் – மெய்ப்பொருளாகிய பரதத்துவத்தை அடையாதார் தற்போதத்தால் செய்யும் தவாதவங்களினாலும், இவற்றின் பயன்களினாலும், உயர்ந்தும் தாழ்ந்தும் சலத்தில் பிரதிபலிதமான சந்திரனைப் போலும் ஆவர்; அப்பரதத்துவத்தை அடைந்தோர் அருள் வடிவாயிருந்து செய்யும் தவங்களும் அவங்களும் இவற்றான் வரும்பயன்களும் இவர்க்கு எங்ஙனம் ஆம் எனின்,

சுத்தக் ககனம் மழையால் கழுவிக் காற்றைக் கனலால் தகனம் செயல்போல் தெளி – நிர்மலமாய் உள்ள ஆகாயத்தை மழையாற் கழுவிக்காற்றைக் கனலாற் சுடுவது போலும் ஆம் என்று அறிதி.

(வி-ரை.) ககனத்தை மழையாற் கழுவுதலும், காற்றைக் கனலாற் சுடுதலும் இன்றாயினவாறு போல், தற்போதம் போய்ப் பேய்பிடியுண்டவரைப்போலும் திருவருளே வடிவாயிருந்த மெய்ஞ்ஞானிகள் திருமேனியில் நிகழும் தவாதவங்கள், அவ்வருள் விளையாட்டே அன்றி, அவர் அவற்றைச் செய்வதும் அவற்றின் பயன் அவரைச் சார்வதும் இன்றென்பது ஆயிற்று. தவாதவங்கள் தத்துவத்தார் அல்லார்க்கு வருவிக்கப் பட்டன. தத்துவம் என்றது ஈண்டுச் சிவத்தை .