காலனுக்குப் பாவமென்றுங் காற்றுங் கதிரவனுஞ்
சீலமிலா ரென்றுஞ் சிவயோகி – மேலொன்றைச்
சுட்டுவதுந் தம்மைச் சுழற்றிவிடா தாட்டு மலக்
கட்டின் பிராந்திவலுக் காண்.
(இ-ள்.) காலனுக்குப் பாவம் என்றும் காற்றும் கதிரவனும் சீலம் இலார் என்றும் சிவயோகி மேல் ஒன்றைச் சுட்டுவதும்– உயிர்களைக் கோறலால் காலனுக்குப் பாவம் உண்டென்றும், அசுத்த நிலத்தில் சலித்தலானும் அந்நிலத்து எரிதலானும் காற்றுங் கதிரவனும் ஆசாரம் இலர் என்றுங்கூறுதல்போல், சிவபூசையாதி நன்மார்க்கம் களைச் செய்திலர் என்றும் நீராடலாதி ஆசாரம் இலரென்றும், இவை முதலிய குணதோஷங்களைச் சிவயோகிகள் மேற் சுட்டிக் கூறுவது,
தம்மைச் சுழற்றிவிடாது ஆட்டும் மலக்கட்டின் பிராந்திதிவலு – தம்மைவிடாது பற்றிநின்று அவத்தைகள் தோறும் சுழற்றி ஆட்டப்பட்ட மலபந்தத்தினால் தோற்றும் பிராந்தியினது சாமர்த்தியமாம்.
(வி-ரை) சரியை கிரியை யோக ஞானங்களுள் ஞானம் ஒன்றுமே முத்திக்கு ஏதுவாகலின், இஞ்ஞானத்தால் முத்தியை அடைந்திருத்தலாற் சரியாதிகளும், உடம்பாதி அசுத்தங்களை எல்லாங் கடந்து சுத்தமாயுள்ள ஆநந்தவெள்ளத்தில் மூழ்கியிருத்தலால் நீராடலாதி ஆசாரங்களுஞ் செய்வது இன்றிச் சிவயோகி சும்மா இருப்பன். அங்ஙனம் இருப்பது சரியாதிகளைச் செய்வோர்க்கு மலமறைப்பால் தெரியாது, தம்மைப்போல் பார்த்து அவனை அவர் இகழ்தலான் “மலக்கட்டின் பிராந்திவலுக்காண்” என்றார்.
காலனுக்குப் பாவமும், காற்றிற்கும் கதிரவனுக்கும் அசத்தமும் இன்றாயது போல், நன்மார்க்கஞ் செய்யாமையால் பாவமும், ஆசாரம் இன்மையால் அசுத்தமும் அவர்க்கு இன்றென்பதுங்காண்க.
காண் – அசை.