நாயேறி வீழ்ந்தென் னடாத்துகிலென் ஞானிக்குப்
பேயாஞ் சகம்பழித்தென் பேணுகிலென் – றோயார்
பெருமை சிறுமையிலை பின்னுமுன்னு மில்லை
வரைவற்று வேண்டிய செய் வார்.
(இ-ள்.) நாய் ஏறி வீழ்ந்து என் நடாத்துகில் என் ஞானிக்குப் பேய் ஆம் சகம் பழித்து என் பேணுகில் என் தோயார் – நாய்மேல் இவர்ந்தோன் அதில் நின்றும் வீழ்ந்ததனால் இகழ்ச்சி என்னை வீழாதிருந்து அதனை நடாத்தியதால் புகழ்ச்சி என்னை! அதுபோல் ஞானிகட்குப் பேய்க் கூத்துப்போல் தோற்றும் இச்சகத்திலுள்ளார் இகழ்ந்தால் அவர்க்கோர் சேதம் என்னை? புகழ்ந்தால் ஓர் இலாபம் என்னை? அவர் ஒன்றோடுந்தோயார்;
பெருமை சிறுமை இலை பின்னும் முன்னும் இல்லை வரைவு அற்று வேண்டிய செய்வார்-அஃதன்றி உயர்ச்சி வந்ததென்று பெருமையும் தாழ்ச்சி வந்ததென்று சிறுமையும் அவர்க்கில்லை, பின்னாகிய சகலமும் முன்னாகிய கேவலமும் இல்லை, ஆகலின் சுத்தமாகிய அருள் வடிவாயிருந்து அளவின்றித் தாம் வேண்டியவாறே திருவிளையாட்டு ஆடுவார்.
(வி-ரை.) இகழ்ச்சியாய் உள்ள நாய் ஏறி வீழ்ந்தாலும் நடாத்தினாலும் இகழ்ச்சி புகழ்ச்சி இன்றாயது போல், ஞானிகள் தமக்கு இகழ்ச்சியாயிருந்த உடம்பை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் அவை அவர்க்கு இன்றென்பது ஆயிற்று.
செம்பிற் காளிதம் போன்று உயிரை அநாதியிற் பற்றியிருந்த சகசமலம் நீக்கற்பொருட்டு மாயையில் தனுவாதி கொடுத்தலின் , சகலத்தைப் பின்னென்றும் ஆணவ சம்பந்தமான கேவலத்தை முன்னென்றுங் கூறினார்.
“சிந்தை பயமிலச்சை” என்னும் திருவெண்பாமுதல் இந்நான்கு திருவெண்பாவானும் சிவஞானி மகிமையை அறிவித்தவாறு காண்க.