தானல்லர் தன்னதல்லர் தத்துவசா லத்தலைவர்
மேனிசதா நந்தம் விளையுமிடம் – யானைக்கை
போலே யிவருடம்பிற் போகமெலாம் பூசையித
னாலே சகம்பிழைக்கு மெண்.
(இ-ள்.) தான் அல்லர் தன்னது அல்லர் தத்துவசாலத்தலைவர் மேனி சதாநந்தம் விளையும் இடம் – தனு கரண புவன போகங்களாய் உள்ள தத்துவங்கள் எல்லாம் தமக்கு அயல் ஆகலின், அவை தாமும் அல்லாமல், அசுத்தம் துக்கம் அநித்தியமாயிருத்தலின், அவை தமதும் அல்லாமல், அந்தத் தத்துவங்களோடு கூடியும் கூடாத சாலத்தோடும் அவற்றிற்குத் தலைவராயிருந்த மெய்ஞ்ஞானிகள் திருமேனி சதாநந்தம் மென்மேலும் உண்டாகும் ஓரிடம்; (ஆகலின்),
ஆனைக்கைப்போல இவர் உடம்பின் போகம் எல்லாம் பூசை இதனாலே சகம் பிழைக்கும் எண்- எடுத்த பொருளின் பரிசமறிவது போல் தோற்றித்தன்னுள் இருந்த நாசிக்குக் கந்தவிடயமுமாக இருந்த யானைக்கை போல், இந்த ஞானிகளது திருமேனியால் அநுபவிக்கும் போகமெல்லாம் இத்திருமேனி அநுபவிப்பது போல் இருந்து இத்திருமேனியுள் இருந்த பரிபூரண சிவத்திற்கும் பூசை ஆம், இப்பூசையினாலே சகத்திலுள்ளார் பிறவித்துன்பத்திற்குத் தப்பி வீட்டின்பத்தை எய்துவர் என்று அறிதி.
(வி-ரை.) முன் தனுகரணங்களை யாம் என்றும் புவன போகங்களை எமது என்றுங் கருதிநின்ற தற்போதங்கெட்டு இப்போது அறிவு தாமாய் ஆநந்தம் தமதாயிருத்தலின், “தானல்லர் தனதல்லர்” என்றார். தேகத்திருந்த போதத்தையும் கருவிகளையும் விழுங் கிக்கொண்டு அதனுள் சிவங்குடியா யிருத்தலின், “மேனி” என்றுங் கூறினார்.
இத்திருவெண்பாவால் ஞானிகட்குப் பத்தி செய்வார் வீடடைவார் என்று அறிவித்தவாறு காண்க.