ஒழுவிலொடுக்கம்

59. பூசி முடிப்பனவும் பூண்பனவும் பொற்றுகிலு

பூசி முடிப்பனவும் பூண்பனவும் பொற்றுகிலு
மாசை மிகுந்த வரசியர்க்காங் – காசிற்ற
முண்டையர்க்காகாசீவன் முத்தனுக்குப் போகமலாற்
குண்டையொப்பார்க் கேனிதுவா கும்.

(இ-ள்.) பூசிமுடிப்பனவும் பூண்பனவும் பொன்துகிலும் ஆசை மிகுந்த அரசியர்க்கு ஆம்- சந்தனமாதி பூசப்படுவனவும், மல்லிகையாதி முடிக்கப்படுவனவும், கொந்தளப் பொன்னோலையாதி பூணப்படுவனவும், பொற்சரிகைச் சேலையாதி உடுக்கப்படுவனவும், ஆகிய இவை முதலிய போகங்களெல்லாம் அரையனால் மிகவும் இச்சிக்கப்பட்ட சுமங்கலைகளாகிய அரசியர்க்கே ஆகும்; (அதுபோலும்),

சீவன் முத்தனுக்குப் போகம் அல்லால் காசு இற்ற முண்டையர்க்கு ஆகா குண்டை ஒப்பார்க்கு என் இது ஆகும் —சிவனது இச்சைப்படியே அவனது திருவடிசேர்ந்த சீவன் முத்தனுக்கே போகம் அன்றி, மங்கல நீங்கிய அமங்கலைக்குப் போகங்களில் ஒன்றேனும் ஆகாவாறு போலும், சிவனடி சேராது தவம் பண்ணுவோர்க்கும் அத்தவத்திற்கு உரிய விரதஞ்செய்து முடிப்பதே அன்றிப் போகங்களில் ஒன்றேனும் அநுபவிக்கலாகாது , அஃதன்றிக் குண்டையைப் போலும் சரியையாதி தொழில் செய்வோர்க்கும் இப்போகம் அநுபவிப்பது என் ஆகும்?

(வி-ரை.) தம்முதலாகிய சிவத்தை இழந்து தவம் பண்ணுவோரை முண்டையர் என்று குறிப்பாற் கூறினார். குண்டைக்குத் தொழில் செய்வதே அன்றி அரையனோடும் கூட்டுரவு இன்மைபோல், சரியையாதிகளைச் செய்வோர்க்கு இத்தொழில் செய்வதே அன்றிச் சிவத்தோடும் கூட்டுரவு இன்மையால், இவரைக் “குண்டையொப்பார்” என்றார்.

இத்திருவெண்பாவால் திருவடியை அடைந்தோர்க்கே போகம் அநுபவிப்பது ஆம், மற்றையர் தமக்குச் சொன்ன நெறி நிற்பதே அன்றிப் போகம் அநுபவிக்க லாகாது என்று அறிவித்தவாறு காண்க.