அதிபக்கு வத்தாற் கநுக்கிரகஞ் செய்யும்
புதுமைக்குச் சாத்திரங்கள் போதா – திதுவென்னாப்
பேறே யனந்தம் பிரகாரம் வந்தானும்
வேறே யனந்த விதம்.
(இ-ள்.) அதிபக்குவத்தாற்கு அநுக்கிரகம் செய்யும் புதுமைக்குச் சாத்திரங்கள் போதாது – தீவிர தர பக்குவம் உடையானுக்கு ஞானாநுக்கிரகம் பண்ணும் அதிசயத்திற்கு வெவ்வேறு வகைப்பட்ட சாத்திரங்கள் எல்லாம் போதாது (அஃது எங்ஙனம் எனின்).
இது என்னாப் பேறே அநந்தம் பிரகாரம் வந்தானும் வேறே அநந்தவிதம் – இது என்று ஒன்றைச் சுட்டுதற்கு இடம் வைக்காது கூறும் உபதேசப்பேறே அவனுக்கு அநந்தவிதமாய்க் கூறும் சாத்திரங்கள் ஆகும், இங்ஙனம் வந்த பக்குவனும் அநந்தம் பெயர்களுள்ளும் வேறு, இவனை ஒழிந்த பக்குவர்களும் அநந்தவிதம் ஆவார்கள்.
(வி-ரை.) தீவிரதர பக்குவனது அறிவு சிவத்தையே அன்றி மற்றொன்றையும் பகுத்து நாடாது ஆகலின், “சாத்திரங்கள் போதாது” என்றார்.
மந்தம், மந்ததரம், தீவிரம் என்னும் இம்மூன்று பக்குவரும் நானாபேதமாய் வருதலினும், இவர்க்கு உபதேசம் நானாபேதமாகக் கூறிப் பக்குவப் படுத்தவேண்டும் ஆகலினும், ” அநந்தவிதம்” என்றார்.
இத்திருவெண்பாவால் தீவிரதர பக்குவனுக்குக் கூறும் உபதேசமே போதுமென்பதும் மற்றைய மூவர்க்கும் அவர் கூறும் உபதேசமொழியும் அன்றி வேதாகமங்களால் உணர்த்த வேண்டும் என்பதும் அறிவித்தவாறு காண்க.