ஒழுவிலொடுக்கம்

62. அறியாமை நீங்கி வறிவா யறிவே

அறியாமை நீங்கி வறிவா யறிவே
யறியாம லாயிரண்டு மற்றுப் – பிரியாதார்
தன்னிழப்பின் ஞான சமாதிக்குச் சாதகரா
மந்நிலைக்கே சீவன் முத்தராம்.

(இ-ள்.) அறியாமை நீங்கி அறிவாய் அறிவே அறியாமல் ஆய் இரண்டும் அற்றுப்பிரியாதார் — சகல கேவலம் ஆகிய அறியாமை நீங்கித்தம்மை அருளாற்கண்டு அவ்வருளறிவாகி, முன் மலமாகிய அறியாமையில் மறைந்திருந்தாற்போல் அவ்வறிவு தானே அறியாமையாகி அதனுள் மறைந்து, இவ்வறிவென்பதும் தாமென்பதும் ஆகிய இரண்டும் அற்று இதனைப்பிரியாதிருப்போர்.

தன் இழப்பில் ஞான சமாதிக்குச்சாதகர் ஆம் அந்நிலைக்கே சீவன் முத்தர் ஆம் – அங்ஙனம் இருக்கவே தற்சுதந்திரபோதம் அறும், அஃது அறவே பரைதானாகிய ஞான சமாதிக்குச்சாதகர் ஆவர், இச்சாதகம் வந்த அக்கணமே சீவன் முத்தரும் ஆவர்.

(வி-ரை.) இம்முறை வந்து பரையோகத்தில் நின்றோர்க்குச் சுகப்பேறும் சுகாதீதமும் தாமே கிடைக்கும் ஆகலின், “அந்நிலைக்கே சீவன்முத்தராம்’ என்றார்.

இத்திருவெண்பாவால் பரையோகத்தில் நிற்போரும் சீவன்முத்தராவர் என்று அறிவித்தவாறு காண்க.