கின்னரியைத் தொட்டவர்போற் கேட்டவளவுக்களவு
சொன்னதல வெங்கள் சுவாமியுரை – மன்னடத்தி
லானந்த மூர்ச்சிதர்கை யாடகயாழ் தன்னிலே
தானுநலம் போலமொழிந் தான்.
(இ-ள்.) கின்னரியைத் தொட்டவர்போல் கேட்ட அளவுக்கு அளவு சொன்னது அல எங்கள் சுவாமி உரை- வருடி வாசிப்பார் தாம் நினைத்துக்கேட்ட பாட்டின் அளவுக்கு அளவு கூறும் கின்னரியைப் போன்று யான் நினைத்து வினாவிய மட்டிற்கு இம்மட்டும் விடைகூறியது அன்று , எமது சுவாமிகளாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவாக்கு; (அஃது எங்ஙனம் எனின்),
மன் நடத்தில் ஆநந்தமூர்ச்சிதர் கை ஆடகயாழ் தன்னிலே தானும் நலம்போல மொழிந்தான்- பரமேசுரன் திருநடனத்தில் அந்நடன அதிசயத்தைப்பார்த்து ஆநந்த பரவசராய் நிற்போர் கைப்பிடித்த பொன்னினால் இயற்றப்பட்ட யாழ் தன்னிலே தான் வாசிக்கும் நலம் போல் யான் கேளாது கேட்க எனக்கு உபதேசமொழிகளை அருளிச் செய்தார்.
(வி-ரை.) அவர் ஆநந்த பரவசராய் நிற்கவும் தெய்வயாழ் வருடாது வாசித்தல்போல, பிள்ளையார் ஆநந்தாதீதராய் எழுந்தருளியிருக்கவும் அவரது தெய்வவாக்கு நினையாது கூறிற்றென்பது அறிக.
“கின்னரியைத்தொட்டவர்போற் கேட்ட அளவுக் களவு சொன்னதல” என்றமையால், கடாவும் விடையும் தாமே அருளிச்செய்தார் என்பது ஆயிற்று.
தெய்வயாழிற்குமேல் வேறுயாழ் இன்மைபோல் இந்த ஆசாரியர்க்குமேல் வேறு ஆசாரியர் இலர் என்பதும் காண்க.
யாழ் உன்னி வாசியாதிருக்கவும் பிறர்க்கு அங்ஙனம் செய்தது போல் தோற்றலின், “தானுநலம்போல மொழிந்தான்” என்று திருவாக்குக்கு அதனை உவமையாகக் கூறினார்.
இவையிரண்டு திருவெண்பாவானும் தமது ஆசிரியர் ஞானபக்குவர் நால்வர்க்கும் உபதேசிக்கு முறைமையைத்தமக்கு அருளிச்செய்யும் போதும் ஆநந்தாதீதராய் எழுந்தருளியிருந்தே அருளிச்செய்தாரென்று அறிவித்தவாறு காண்க.