சும்மாதே பார்த்திருக்கச் சுத்தியா முத்தமர்க்குத்
தம்மாய்வார்க் கோருரையே சஞ்சீவ – மென்மேலு
மாற்றஞ் சகுனப்புள் வாக்கு மதுவுண்ட
போற்றும்பியின் பாட்டுப் போல்.
(இ-ள்.) உத்தமர்க்குச் சும்மாதே பார்த்து இருக்கச் சுத்தி ஆம் தம் ஆய்வார்க்கு ஓர் உரையே சஞ்சீவம் – தீவிரதர பக்குவர்க்கு ஓர் மொழியும் கூறாது ஞானாசாரியர் மௌனாநந்த நோக்கால் பார்த்திருக்கவே ஆன்மசுத்தியாம், தீவிரபக்குவமுடையராய்த் தற்போதம் ஒழிப்போர்க்கு அப்போதஞ் சிறிதேனும் பதையாது ஒழிதற்கு ஏதுவாய்க்கூறும் ஓர் மொழியே சஞ்சீவம் போன்று சுத்தி ஆம்
மென்மேலும் மாற்றம் சகுனப்புள் வாக்கு போல் மது உண்ட தும்பியின் பாட்டுப்போல்– மந்ததர பக்குவர்க்கு விட்டு இசையாது இசைக்கும் சகுனப்புள் வாக்குப்போலச் சிற்சில சொற்களால் தெளிவிக்கச்சுத்தியாம். மந்தபக்குவர்க்கு மதுவை நிறைய உண்ட தும்பி இடையறாது பாடும் பாட்டுப்போல வேதாகம சாத்திரங்களாலும் நானாவுபாய யுத்திகளாலும் இடையறாது அறிவிக்கச் சுத்தியாம்.
(வி-ரை.) திருநோக்கக்குறிப்பால் அந்நிலை தெரிந்து கோடலின் , “சும்மாதே பார்த்திருக்க” என்றும், சஞ்சீவத்தால் உடலம் சுத்தியாவது போல ஓர் உரையால் ஆன்ம சுத்தி பெறுதலின், “சஞ்சீவம்” என்றும், சகுனப்புள் வாக்கால் தான் நினைத்தபொருள் கிடைத்தல்போல் சிற்சில சொற்களால் மெய்ப்பொருளைத்தெரிந்து கோடலின் “சகுனப்புள் வாக்குப்போல்” என்றும், மூர்ச்சித்துக்கிடந்த பெண் தும்பியை ஆண் தும்பி சூழ்ந்து கொண்டு இடையராது பாடி ஆடவே அதற்கு அம்மூர்ச்சை தெளிந்து இதனோடு பறந்து கூடல்போல, நானாவுபாய யுத்திகளான் இடைவிடாது அறிவித்து அறிவினது ஆணவமூர்ச்சையை நீக்கித்தம்மோடு சேர்த்தலான், “தும்பியின் பாட்டுப்போல்” என்றுங்கூறினார். சுத்தியாவது சகல கேவலங்களை நீங்கி அவற்றின் வாசனையோடு எழுந்த தற்போதமும் ஒழிதல்.
“மென்மேலு மாற்றஞ் சகுனப்புள்” என்றதனால் ஆந்தை என்பதாயிற்று.
சகுனப்புள் வாக்குப்போல் என்றும் மதுவுண்ட தும்பியின் பாட்டுப்போல் என்றுங் கூட்டுக.
இத்திருவெண்பாவால் ஞானாசாரியர் உபதேசத்தால் நால்வகைப் பக்குவரும் தெளிந்து கொள்ளு முறைமையை அறிவித்தவாறு காண்க.