ஒழுவிலொடுக்கம்

68. பஞ்ச மலமும் பசுவநந்த மும்பதியு

பஞ்ச மலமும் பசுவநந்த மும்பதியு
மஞ்சு தொழிலு மவத்தைகளுங் – கிஞ்சறிவுங்
கேட்டுச் சரிதாதி செய்துகிலே சங்கெடாக்
காட்சிமெழு கிற்கனகங் காண்.

(இ-ள்.) பஞ்சமலமும் பசு அநந்தமும் பதியும் அஞ்சு தொழிலும் அவத்தைகளும் கிஞ்சு அறிவும் கேட்டு – ஆணவம், மாயை, காமியம், திரோதை, மாமாயை என்று கூறப்பட்ட பஞ்சமலங்களினது இலக்கணமும், இம்மலங்களால் மறைப்பட்டிருந்த அநேகமாயுள்ள பசுவினது இலக்கணமும், இப்பசுபாசங்கட்கு முதன்மையாய் ஏகமாயிருந்த பதியினது இலக்கணமும், அப்பதி செய்யாநின்ற பஞ்சகிருத்திய இலக்கணமும், இப்பஞ்சகிருத்தியத்தால் நடக்கும் சாக்கிராதி அஞ்சவத்தையினது இலக்கணமும், இவ் அஞ்சவத்தைகள் தோறும் சுழலும் ஆன்மபோத இலக்கணமுங்கேட்டறிந்தும்,

சரிதாதி செய்து கிலேசம் கெடாக்காட்சி மெழுகில் கனகம்- சரியை கிரியை யோகங்களைச் செய்தும், அப்பாசத்தை நீங்கிப் பதியை அடைந்து பிறவித்துன்பத்தை நீக்க மாட்டாதார் அறிவு மாற்று அறிமெழுகில் அடங்கிய கனகம்போலும் ஆம்.

(வி-ரை.) உரைத்து ஒட்ட ஏறிய கனகம் உருக்கி எடாமையின் மெழுகில் மறைந்தாற்போலத் திரிபதார்த் தங்களினது உண்மையைக் கேட்டறிந்த அறிவு சுவாது பவத்தால் வெளியாகாது மலத்துள் மறைந்தமையால், “மெழுகிற் கனகங்காண்”என்றார்.

அவ்வறிவு பிறர்க்குக் காட்சியாய்த் தோற்றலான், அதனைக் “காட்சி ” என்றார்.

காண் – அசை.

இத்திருவெண்பாவால் பதி-பசு-பாசங்களினது உண்மையை வேதாகமங்களால் உணர்ந்தாலும் அப்பதியைச் சுவாநுபவத்தால் உணரார்க்குப் பயனில்லை என்று அறி வித்தவாறு காண்க.