முலை முதிர நாண முதிர்ந்தடங்கி மூடிக்
கலவியிலே நக்கினத்தைக் காட்டற் – சலனைபய
னானாலுந் தம்பனைசெய் தாநந்த மாக்குவது
போனாலா மிந்தப் பொருள்.
(இ-ள்.) முலை முதிர நாணம் முதிர்ந்து அடங்கி மூடிக்கலவியிலே நக்கினத்தைக் காட்டல்- ஓர் பேதைப்பெண் தனது முலை முதிர முதிர நாணம் மேன்மேலும் முதிர்ந்து, பிறபுருடரோடு முன்போல் நகையாடலாதி செய்யாது அடங்கி, அம்முலையினை மறைத்துத் தனது சுய புருடனுக்குக் கூட்டுறவின்கண் நக்கினத்தைக் காட்டுவது போலும் ஒருவன் அறிவு முதிரமுதிர முன்போல விடயங்களிற் செல்வதற்கு நாண முதிர்ந்து அவ்விடயங்களிற் செல்லும் போதத்தை உள்ளடக்கித் திருவருளில் மறைத்து ஆநந்தத்திற்கொப்பித்து நிற்றல்; (அப்போதத்தை ஆநந்தத்திற்கு ஒப்பிக்க எனின் அங்ஙனம் ஒப்பிக்குமாறே நில்லாமல்),
சலனை பயன் ஆனாலும் தம்பனை செய்து ஆநந்தம் ஆக்குவது போனால் இந்தப்பொருள் ஆம்- போதச்சலனை ஆனாலும், விடயப்பயனை அனுபவிப்பதானாலும் இவ்விடயப்பயனை நீக்கி அப்போதச் சலனையை அடக்கி அப்போதத்தை ஆநந்த மயமாக்குவதானாலும், இவ்வாநந்தப்பொருள் ஓர் இயல் பிற்றாய்த்தோற்றாது, அங்ஙனம் செய்வன போம் ஆயின், இப்பொருள் ஓர் இயல்பிற்றாய்த் தோற்றுவதாம்.
(வி-ரை.) முலை முதிர்ந்த பெண் அம்முலையையும் அல்குலையும் பிறபுருடருக்குக் காட்டாது மறைத்துச்சுயபுருடனுக்குக் காட்டுதல்போல், அறிவு முதிர்ந்தோர் தற்போதத்தை விடயங்களிற் செல்லவொட்டாது மீட்டு உள்ளடக்கி அதனைச் சிவாநந்தத்திற்கு ஒப்பிக்க வேண்டும் ஆகலின் அங்ஙனம் உவமை கூறினார்.
போதம் விஷயங்களிற் சென்று அழுந்தியும், ஆநந்தத்திற் சென்று அழுந்தியும் இங்ஙனம் மாறிநிற்கும் எனின், ஆநந்தமும் மாறித்தோன்றும் ஆகலின், “ஆநந்தமாக்குவது போனாலா மிந்தப்பொருள்” என்றார்.
“ஆனாலும்” என்பதனைச் சலனை என்பதனோடும், ஆநந்தமாக்குவ தென்பதனோடுங் கூட்டுக.
இத்திருவெண்பாவால் அறிவாநந்தத்து அழுந்திய போதம் விரிந்து விடயாநந்தத்திற் செல்லாது ஓரியல்பிற்றாய் நின்றோர்க்கே அவ்வாநந்தம் மாறாது கிடைக்கும் என்று அறிவித்தவாறு காண்க.